EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கிறார், செந்தில்பாலாஜி போல விரைவில் திமுகவில் இணையப்போகிறார் என்று பெரிதும் பரபரக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, தன் மீதான சர்ச்சைகளுக்கெல்லாம் ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதல்வர் பதவியையும் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பையும் ஏற்றபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் தங்கமணி. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கமணியும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். அந்த பிணைப்பும் இருந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் அவருக்கு துணையாக நின்று அதிமுக மொத்தமாக எடப்பாடி பழனிசாமி கைக்கு வர காரணமாக இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே தங்கமணியின் செயல்பாடுகளில் சுனக்கம் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, அவர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அதன்காரணமாகவே மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமியோடு அவர் பயணம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. மிக முக்கியமாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போல தங்கமணி திமுகவில் இணையப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியின.
ஆனால், அப்போதே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டார் தங்கமணி. இருப்பினும், தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியை சென்று சந்திக்கவோ, அவருடன் பிரச்சாரத்திற்கு செல்லவோ இல்லை. இதனால், உண்மையிலே எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதா என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் ஏறி, அவரோடு ஒன்றாக பிரச்சாரம் செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தங்கமணி.
மேலும் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த தங்கமணி, உடல்நலம் சரியில்லாத போது கட்சிக்காகவும் எடப்பாடிக்காகவும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.