Thiruvallur Tourist Places: கோயில் முதல் ஏரி வரை! திருவள்ளூரில் சுற்றிப் பார்க்க இத்தனை இடங்களா? முழு லிஸ்ட்
Thiruvallur District Tourist Places: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த மற்றும் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Tiruvallur District Tourist Places in Tamil: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்:
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து மாவட்டங்களில் ஒன்று திருவள்ளூர். தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலிலும், கோயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வீர ராகவ சுவாமி கோயில்:
திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவசுவாமி கோயில் என்பது இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு விஷ்ணு வீரராகவப் பெருமாள் என்றும், அவரது மனைவி லட்சுமி கனகவல்லி தாயார் என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக முதலில் நம்பப்படுகிறது . இங்கு 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தின் பிற்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயில் ஏழு நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது. கோயிலில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன. தமிழ் மாதமான சித்திரையில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படும் தேர் திருவிழா மற்றும் பவனி திருவிழா இக்கோயிலின் மிக முக்கியமான திருவிழாவாகும்.
திருத்தணி முருகன் கோயில்:
திருத்தணி முருகன் கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருத்தணி பகுதியில் உள்ள பொதிகை மலை மீது இந்த கோயில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, இந்த கோயில் 365 படிகளைக் கொண்டுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்
சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன், இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
பழவேற்காடு ஏரி (புலிகாட் ஏரி)
புலிகாட் ஏரி என அறியப்படும் பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகத்திற்கு, அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. இது சுற்றுலா பயணிகளை கவர்வதோடு, படகு சவாரியும் முக்கிய அம்சமாக திகழ்கிறது.
கோரமண்டல் கடற்கரையில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான பழவேற்காட்டில் இருந்து, கிழக்கு திசையில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்ய டச்சுக்காரர்கள் 1609 ஆம் ஆண்டில் “குல்டிரா” என்ற கோட்டையை கட்டினார்கள். அந்த பகுதிக்காக டச்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் பல போர்கள் நடந்தது. இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் 1825 ஆம் ஆண்டு பழவேற்காடை கைப்பற்றினர்.
பூண்டி நீர்தேக்கம்:
1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை நதி நீரை இடைமறித்து, 2573 டி.எம்.சி. நீரை சேமிக்க பூண்டி கால்வாய் கட்டப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் அரசியல் ஆலோசகராக இருந்த, சத்யமூர்த்தியை நினைவுகூறும் விதமாக பூண்டி நீர்தேக்கத்திற்க்கு சத்தியமூர்த்தி சாகர் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நீர் தேக்கம் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பதோடு, முழு கொள்ளளவை எட்டும்போது கண்கொள்ளா காட்சியை வழங்கக் கூடிய சுற்றுலா தளமாகவும் உள்ளது.
புவியியல் வல்லுநரான சர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்களால் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குடியம் குகை திருவள்ளூர் தாலுக்காவில் பூண்டிக்கு அருகில் உள்ளது. இதைசார்ந்து, கடந்த 1985ம் ஆண்டு, திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசு தொல்பொருளியல் திணைக்களம், பூண்டி மற்றும் பிற பகுதிகளிலும் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய வரலாற்று சின்னங்களின் சிறப்பம்சங்களுக்குரிய அருங்காட்சியகமாகும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.
மேற்குறிப்பிடட்டவை மட்டுமின்றி பெரியாபாளையம் பவானி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளிட்டவையும், திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களாக உள்ளன.