Mark Zuckerberg | பாதுகாப்பு குறைபாடு.. பேஸ்புக் மீது குவியும் புகார்கள்.. மார்க் எழுதிய நீண்ட கடிதம்!
லாபத்துக்காக, பாதுகாப்பை பணயம் வைப்பதாக எழுந்துள்ள புகாரை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஒரு நாள் இரவில் ஏற்பட்ட திடீர் முடக்கத்தால் பேஸ்புக் கடும் சரிவை சந்தித்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பும் கிடுகிடுவென இறங்கியுள்ளது. இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பேஸ்புக்கின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. பேஸ்புக் முன்னாள் ஊழியரான பிரான்சஸ் ஹவ்கேன் ஏராளமான புகார்களை அடுக்கியுள்ளார். அதில் பேஸ்புக் நிறுவனம் லாபத்துக்காக, வெறுப்புணர்வு தூண்டும் மற்றும் போலி செய்திகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறியிருந்தார்.
அதேபோல குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயங்கள் இருப்பதாகவும், இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், நாங்கள் லாபத்துக்காக பாதுகாப்பை பணயம் வைக்கவில்லை என்று மார்க் சக்கர்பெர்க் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து சக்கர்பெர்க் பேஸ்புக் ஊழியர்களுக்கு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். அதை தனது பேஸ்புக் கணக்கிலும் பதிவிட்டுள்ளார்.
“கடந்த சில ஆண்டுகளில் நமது சேவையில் நேற்றைய தினம் மிக மோசமான தினமாக அமைந்துவிட்டது. இதுபோன்ற காலகட்டத்தில் நாம் வலுவாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்துள்ளோம். மக்களுக்கு நம் சேவை எந்தளவுக்கு முக்கியம் என்பதை இந்தப் பிரச்னை நினைவூட்டியுள்ளது. லாபத்துக்காக பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறோம் போன்ற வாதங்களில் துளியும் நியாயமில்லை.
பேஸ்புக்குக்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் வருகிறது. தீங்கு விளைவிக்கும் அல்லது கோபப்படும் பதிவுகளுக்கு அடுத்து தங்கள் விளம்பரங்கள் வரக்கூடாது என்று விளம்பரதாரர்கள் சொல்கின்றனர். அப்படி இருக்கும்போது மக்களிடையே கோபத்தை தூண்டி, மனச்சோர்வடைவதற்காக எந்த நிறுவனமும் ஒரு விஷயத்தை உருவாக்குமா என்பது தெரியவில்லை. குழந்தைகள் பிரச்னையில் பதிலளிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இருக்கிறது. குழந்தைகள் தொடர்பாக எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. என் குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆன்லைனில் இருக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை கருதி ஏராளமான விஷயங்களை உருவாக்கியுள்ளோம்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், நாங்கள் எதை நோக்கி பயணிக்கிறோமோ அதற்கு நேர் எதிராக உள்ளது. ஏராளமான ஆய்வுகளை செய்துள்ளோம். நமது ஆய்வில் கடினமான நேரங்களில் இளம் பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் உதவியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தனிமை, கவலை, பசியின்மை என்று பல கடினமான காலங்களில் இன்ஸ்டாகிராம் சிறந்த மனநிலையை ஏற்படுத்த உதவியதாக இளம்பெண்கள் கூறியிருக்கின்றனர்.
இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு போன்றவற்றில் நெகட்டிவ் விஷயங்கள் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு, நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை செய்து, மக்களிடையே அதை வெளிப்படையாக கொண்டு சேர்க்க வேண்டும். ” என்று சக்கர்பெர்க் கூறியுள்ளார்.