சீனாவில் தீவிரமாகும் பொருளாதார சிக்கல்! 900 க்கும் மேற்பட்ட வேலைகளை நீக்கிய சியோமி!
சவுத் சீனா மார்னிங் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கிட்டத்தட்ட 3 சதவிகித ஊழியர்கள் இந்த வேலை குறைப்பால் பாதிப்படைந்துள்ளனர்
பொருளாதார சிக்கல் :
ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிறகு உலக நாடுகள் பொருளாதாரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கொரோனா , ஊரடங்கு எதிரொலி காரணமாக சீனா கூடுதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சில முன்னணி நிறுவனங்களின் வருவாயும் கணிசமாக குறைய தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி நிறுவனத்தின் வருவாய் குறைந்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த 900 க்கும் மேற்பட்ட வேலைகளை நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
900 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைத்த சியோமி :
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi நிறுவனத்தின் வருவாய், ஜூன் காலாண்டில் (Q2) கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் 900 க்கும் மேற்பட்ட வேலைகளை சியோமி நிறுவனம் குறைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அங்குள்ள தொழிலாளர்களை பெருமளவு பாதித்துள்ளது. சவுத் சீனா மார்னிங் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கிட்டத்தட்ட 3 சதவிகித ஊழியர்கள் இந்த வேலை குறைப்பால் பாதிப்படைந்துள்ளனர்.ஜூன் 30, 2022 நிலவரப்படி, சியோமி நிறுவனத்தில் மொத்தம் 32,869 முழுநேர பணியாளர்கள் இருந்தனர், அவர்களில் 30,110 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் . அவர்களில் பெரும்பாலானோர் பெய்ஜிங்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர். அவர்களை தவிர மீதமுள்ளவர்கள் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள்.
தொடர் சரிவு :
நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை குறித்து பேசிய சியோமி நிறுவன தலைவர் வாங் சியாங் “ இந்த காலாண்டில், அதிகரித்து வரும் உலகளாவிய பணவீக்கம், அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்கள் (மற்றும்) சிக்கலான அரசியல் சூழல் உட்பட பல சவால்களை எங்கள் தொழில் எதிர்கொண்டது. இந்த சவால்கள் ஒட்டுமொத்த சந்தை தேவை மற்றும் காலத்திற்கான எங்கள் நிதி முடிவுகளை கணிசமாக பாதித்தன" என்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.கடந்த ஆண்டு முதலே சியோமி ஸ்மார்ட்போன் விற்பனைகள் கணிசமாக குறைய தொடங்கியது. இருந்து அதன் வருவாய் 28.5 சதவீதம் சரிந்தது, கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் 59.1 பில்லியன் யுவானில் இருந்து இந்த ஆண்டு 42.3 பில்லியன் யுவானாக இருந்தது. இந்த நிலையில் “2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உலகளாவிய மேக்ரோ பொருளாதாரக் கொந்தளிப்பு மற்றும் கோவிட் -19 இன் தாக்கம் ஆகியவை ஸ்மார்ட்போன்களுக்கான ஒட்டுமொத்த சந்தை தேவையை தொடர்ந்து பாதிக்கின்றன" என்று Xiaomi தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் துறை ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 8.9 சதவீதமும், காலாண்டில் 7.7 சதவீதமும் குறைந்துள்ளது, மேலும் சீனாவின் மெயின்லேண்ட் தொழில்துறை ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 10.1 சதவீதமும், காலாண்டில் 10.9 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி போலவே பல முன்னணி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்கனவே வேலை குறைப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.