Whatsapp Feature: இதுவும் வந்துருச்சா..! ஒரே ஃபோன் - பல வாட்ஸ்-அப் கணக்குகள்.. அப்டேட் வரிசையில் மெட்டா அதிரடி
ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா செயலில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா செயலில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருப்பது போன்று, ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு மாறும் சுவிட்ச் ஆப்ஷன் அம்சம் வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே செயலி, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்:
தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளரால் ஒரே கணக்கை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எனவே, வெவ்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த, பயனர்கள் கட்டாயம் இரண்டு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்துவது ஒரு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக இரட்டை சிம் விருப்பங்கள் உள்ளவர்களுக்கு, குளோன் செய்யப்பட்ட WhatsApp செயலிகளை பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அதற்கு தீர்வு காணும் வகையில் தான் வாட்ஸ்-அப் செயலியில் புதிய பயன்பாடு அமலுக்கு வர உள்ளது.
சுவிட்ச் ஆப்ஷன்:
புதிய அப்டேட்டின்படி, QR குறியீடு பொத்தானுக்கு அருகில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தொடுவதன் மூலம் பயனர்கள் புதிய WhatsApp கணக்கைச் சேர்க்கும் திறனைப் பெறுவார்கள். அதே மெனுவில் வேறு கணக்கிற்கு மாறுவதும் எளிதாகிவிடும். பின்பு லாக் -அவுட் செய்யும் வரை பயனர் அதே கணக்கில் தான் நீடிப்பர். இந்த அம்சம் பயனர்களுக்கு பல வாட்ஸ்-அப் கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட அரட்டைகள், பணி உரையாடல்கள் மற்றும் பிற செய்திகளை ஒரே சாதனத்தில் ஒருங்கிணைக்க அவர்களுக்கு உதவும். ஒவ்வொரு கணக்கிற்கான நோடிபிகேஷனும் தனித்தனியாக இருக்கும்.
”அட்மின் ரிவ்யூ”
வாட்ஸ்-அப் செயலியில் உள்ள குழுக்களின் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ”அட்மின் ரிவ்யூ” எனும் புதிய அம்சம் தற்போது சோதனையில் உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதன்படி, புதிய அம்சம் மூலம் குழுவில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களும், அதில் வரும் பொருத்தமற்ற செய்திகளை நேரடியாக குழுவின் அட்மினிடம் புகாரளிக்கும் புதிய விருப்பத்தை இந்த அம்சம் குழு அமைப்புகளின் திரையில் அறிமுகப்படுத்த உள்ளது. அவ்வாறு ஒரு செய்தி தொடர்பாக புகார் கிடைத்த உடன், டெலிட் ஃபார் எவரிவொன் என குறுஞ்செய்தியை நீக்கலாம் அல்லது புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் தன்மையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க அட்மினுக்கு அதிகாரம் இருக்கும். குழுவின் உரையாடலில் பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலைப் பேணுவதற்காக குறிப்பிட்ட நபரை குழுவிலிருந்து நீக்கும் அம்சமும் இதில் அடங்கும்.