Whatsapp New Feature: ஃபைல் வேண்டாம் ஃபோட்டோவே போதும்.. வாட்ஸ்-அப் கொண்டுவரப்போகும் அசத்தல் அப்டேட்..
வாட்ஸ்-அப் செயலியில் குவாலிட்டியே குறையாமல் புகைப்படங்களை அனுப்ப, புதிய அப்டேட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெரும். அதனால் பீட்டா வெர்ஷன் என்று ஒன்றை உருவாக்கி முன்னரே ஒரு சில பயனர்களிடையே சோதனை செய்து வருகிறது. அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகிறது.
தரம் குறையும் புகைப்படங்கள்:
இதனிடையே, வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் குவாலிட்டி குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. குவாலிட்டி குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். இந்நிலையில் பயனர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ்-அப் செயலி புதிய அப்டேட் ஒன்றை விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:
புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் ஒரிஜினல் குவாலிட்டி குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும் என கூறப்படுகிறது. அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் ஒன்று வழங்கப்பட உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் குவாலிட்டி குறையாமல் நிர்வகிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பீட்டா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து, அனைத்து பயனாளர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்-அப் செயலியில் பகிரும்போது புகைப்படத்தின் குவாலிட்டி குறைகிறது என்ற பயனாளர்களின் நீண்ட கால புகாருக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ஸ் மெசேஜ் ஸ்டேடஸ்:
அண்மையில், ஆண்ட்ராய்ட் வர்ஷன் 2.22.21.5 பீட்டா அப்டேட்டின் படி, வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது..
மேலும், வாய்ஸ் மெசேஜ் சேவையில் கூடுதல் வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்யும்போது, விண்டோவை விட்டு வெளியே வந்தால், அதை ஆட்டோமேட்டிக்காக் சேமித்து வைப்பது, ஸ்டேடஸில் ப்ளே/ பாஸ் வசதியை கொண்டு வருவது உள்ளிட்டவைகளையும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கூகுள் டிரைவ் தேவைப்படாது”
இதனிடையே, பயனாளர்கள் புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு தங்களது வாட்ஸ்-அப் கணக்கை மாற்றினால், கூகுள் டிரைவின் உதவியுடன் மட்டுமே தங்களது பழைய போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஸ்மார்ட் போனிற்கு பரிமாறிக்கொள்ளலாம். எனவே, பழைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்ற வேண்டுமானால், கூகுள் டிரைவின் உதவி என்பது கட்டாயமாக உள்ளது. அதனை தவிர்க்கும் வகையில், வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட உள்ளது.
புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?
புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் கூகுள் டிரைவின் உதவியின்றி பயனாளர்கள் தங்களது சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு பயனாளர்கள் தங்களது வாட்ஸ்-அப் செயலியில் Settings> Chats > Chat transfer to Android எனும் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.