WhatsApp Spyware Pegasus: Whatsapp-ஐ எப்படி ஹேக் செய்கிறது இந்த பெகசஸ் ஸ்பைவேர்..!
கிரேக்க புராணங்களில் பெகசஸ் என்பது ஒரு கற்பனைக் குதிரை. நாம் தற்காலத்தில் காதில் கேட்கும் இந்த பெகசஸ் நாம் கற்பனைகூட செய்துகொள்ளமுடியாத அளவுக்கு பல இணைய தாக்குதல்களை செய்து வருகிறது.
கிரேக்க புராணங்களில் பெகசஸ் என்பது ஒரு கற்பனைக் குதிரை. இப்போது நாம் கேள்விப்படும் இந்த பெகசஸ் நாம் கற்பனைகூட செய்துகொள்ள முடியாத அளவுக்கு பல இணைய தாக்குதல்களை செய்து வருகிறது. இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெகசஸ் வரலாறு இதுதான்..
பெகசஸ் ஸ்பைவேர் முதன்முதலில் 2016ல் தான் வெளிச்சத்துக்கு வந்தது. முதன்முதலில் அரபு நாட்டு சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபோன் ஹேக் செய்யப்பட்டது. அப்போது பெகசஸ் ஐஃபோன்களை தாக்குவதாக கண்டறியப்பட்டது. உடனே ஆப்பிள் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு இந்த ஸ்பைவேரை எதிர்கொண்டது.
ஓராண்டுக்குப் பின்னர் பெகசஸ் ஸ்பைவேர், ஆண்ட்ராய்டு ஃபோன்களையும் தாக்குவது உறுதியானது. அப்போதுதான் இந்தியர்களின் சில வாட்ஸ் அப் கணக்குகளும் இந்த ஸ்பைவேரில் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. இந்நிலையில் என்எஸ்ஓ நிறுவனமானது நாங்கள் ஸ்பைவேர் செயலியை மட்டுமே உருவாக்கியுள்ளோம். இதை நாங்கள் சில அரசாங்களுக்கு விற்றுள்ளோம். ஆனால், அந்த செயலியைக் கொண்டு யார் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது அந்தந்த அரசாங்கத்தின் மீதான பொறுப்பே தவிர எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டது.
எப்படிச் செயல்படுகிறது பெகசஸ் ஸ்பைவேர்..
ஒரு போனை ஹேக் செய்யவேண்டும் என்று, முடிவு செய்துவிட்டால் பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தும் ஹேக்கர்கள் ஒரு சந்தேகத்துரிய வெப்சைட் லிங்கை குறிப்பிட்ட அந்த மொபைலுக்கு அனுப்புகின்றனர். பயனாளர் அந்த லிங்கை கிளிக் செய்துவிட்டால் போது, பெகசஸ் அவரது ஃபோனில் இஸ்டால் ஆகிவிடும். சில நேரங்களில் வாட்ஸ் அப் வாய்ஸ் கால் மூலமும் இந்த ஸ்பைவேர் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இதை மிஸ்டு வாய்ஸ் கால் மூலம் ஹேக்கர்கள் செய்கின்றனர். பெகசஸ் ஸ்பைவேர் இஸ்டால் ஆகிவிட்டால் போதும் அது குறிவைத்த நபரின் ஜாதகத்தையே ஃபோனில் இருந்து திரட்டிவிடும். என்க்ரிப்டட் உரையாடல்கள் கூட கண்காணிக்கப்பு வளையத்துக்குள் வந்துவிடும். இதைப்பயன்படுத்தி மெசேஜ்களை வாசிக்கலாம், ஃபோன் கால் டிராக் செய்யலாம், குறிவைக்கப்பட்ட நபரின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம், அவர் செல்லும் இடங்களை டிராக் செய்யலாம், அந்த ஃபோனின் வீடியோ கேமராவை கூட பயன்படுத்தலாம், குறிப்பிட்ட நபரின் உரையாடல்களை அவருடைய ஃபோன் மைக்கைப் பயன்படுத்தி ஹேக்கர் கேட்கலாம்.
இப்போது பெகாசஸின் நிலை என்ன?
பெகாசஸ் பற்றி இனியும் கவலைப்படத் தேவையா என்ற கேள்வி எழாமல் இல்லை. கணினி நிபுணர்கள், எத்திக்கல் ஹேக்கர்ஸ் இனியும் பெகசஸ் ஸ்பைவேர் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை எனக் கூறுகின்றனர். ஆப்பிள் iOS 9 அப்டேட் மூலம் பெகசஸ் சவாலை தவிடுபொடியாக்கிவிட்டது எனத் தெரிவிக்கின்றனர். கூகுளும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த ஸ்பைவேருக்கு எதிராக அப்டேட்களை கொண்டுவந்து விட்டது என்கின்றனர். ஆனால் இதுவரை நடந்திருக்கும் உளவு வேலைகளில் எந்த அளவுக்கு நாட்டுக்கும், தனி மனிதர்களுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்னும் அச்சுறுத்தல் மிகத் தீவிரமாக எழுந்துள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூஸ் 18, தி வயர் போன்ற இதழ்களின் பத்திரிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த ஸ்பைவேர் இருப்பதாக ஃபாரன்சிக் டீம் கண்டறிந்துள்ளது. முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில், அரசு முகமைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.