(Source: ECI/ABP News/ABP Majha)
Twitter Blue Price: அய்யய்யோ.. ட்விட்டரில் ப்ளூடிக்கிற்கான கட்டணம் இவ்வளவா? .. இந்தியாவில் வருகிறது புதிய நடைமுறை
இந்தியாவில் டிவிட்டர் பயனாளர்களுக்கு ப்ளூடிக்கிற்கான கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியது முதல், அதில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக பயனாளர்களிகளின் கணக்கை வெரிஃபைடு செய்து அதற்காக, ப்ளூ டிக் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும், டிவிட்டர் நிறுவனத்தின் செலவினத்தை குறைத்து, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. அதனடிப்படையில், வெரிஃபைடு கணக்குகளுக்கு கட்டண அடிப்படையில் ப்ளூ டிக் வழங்கும் நடைமுறை அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. அதைதொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அந்த கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளது.
கட்டண விவரம்:
iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டுமின்றி, ட்விட்டரின் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் 900 ரூபாய் ஆகவும், அதே சமயம் இணையத்தில் கட்டணம் மாதத்திற்கு ரூ.650 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வருடாந்தரக் கட்டணமாக ரூ. 6,800-ஐ செலுத்தியும் சந்தாதாரகாக சேரலாம். இதன் விலை மாதத்திற்கு சுமார் ரூ.566 ஆகும். இருப்பினும், இந்த திட்டம் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தி சந்தாதாரராக மாறுவதன் மூலம், ப்ளூ டிக் பெறுவது மட்டுமின்றி, டிவிட்டரில் வழங்கப்படும் பல்வேறு புதிய அப்டேட்டுகளும் மற்றவர்களை காட்டிலும் முன்னதாக அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
கூடுதல் அம்சங்கள்:
சந்தாதாரர்களுக்கு டிவிட்டரை எடிட் செய்வது, புக்மார்க் போல்டர்ஸ், கஸ்டம் ஆப் ஐகான்ஸ் மற்றும் NFT புரொபைல் பிக்சர்ஸ் போன்ற பல அப்டேட்கள் மற்றவர்களை காட்டிலும் முன்னதாகவே நடக்கும். தங்களது ஆப்பிற்கு பல்வேறு வண்ணங்களில் தீம்களை தேர்வு செய்வது, ரிப்ளை டிவீட்டிற்கு முன்னுரிமை அளிப்பது, மற்றவர்கள் காண்பதற்கு முன்பாகவே தங்களது பதிவை அண்டு செய்வது போன்ற ஆப்ஷன்களும், சந்தாதாரர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. சந்தாதாரரகள் ஒரு பதிவில் 4000 எழுத்துக்களை பயன்படுத்தலாம் எனவும், 60 நிமிடம் அல்லது 2 ஜிபி வரையிலான வீடியோக்களை பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
3 விதமான வெரிஃபைட் ஆப்ஷன்:
டிவிட்டரில் தற்போது பயனாளர்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு, வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. அதன்படி, நிறுவனங்கள் என்றால் கோல்ட் குறியீடும், அரசுகள் என்றால் கிரே குறியீடும் மற்றும் தனிநபர்களுக்கு ப்ளூ வண்ண டிக் குறியீடும் வழங்கப்படுகிறது. முன்னதாக, பிரபல நபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது நபர்களின் உண்மையான கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டது. ஆனால், டிவிட்டரில் இனி சந்தாக் கட்டணத்தைச் செலுத்தும் எவரும் ப்ளூ டிக்கை வாங்கலாம்.