Global Spam Report: வேண்டாம் என்றாலும் விடாத ஸ்பேம் அழைப்புகள்: 4வது இடத்தில் இந்தியா: அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்
உலக அளவில் ஸ்பேம் கால்களை எதிர்கொள்வதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது
உலக அளவில் ஸ்பேம் கால்களை எதிர்கொள்வதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
உலகம் பெரும்பாலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அந்த காலத்தில் தகவலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துவதற்கு புறாக்களையோ, ஒற்றர்களையோ தூது அனுப்பிக்கொண்டிருந்தனர். அதையடுத்து சற்று நவீன மயமாகி போஸ்டல், தொலைபேசி என்று வளர்ச்சி பாதையை நோக்கி மனிதன் பயணிக்க ஆரம்பித்தான்.
எந்த ஒரு வேலையையும் எளிதாக்க மனிதன் பலவிதமான சிந்தனைகளை கிளப்ப, அனைத்து பொருட்களையும் தனக்கு வசமாக்க தொடங்கினான். அந்த வகையில்தான், வாகனங்கள், மின்சாரம், ஃபேன், லைட், தொலைபேசி, கம்ப்யூட்டர் என தனக்கு தேவையான அனைத்தையும் கண்டுபிடிக்க தொடங்கினான்.
இவையனைத்தும் ஒரு மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது. இப்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறது. அந்த அளவுக்கு செல்போன் நம்மை அடிமைப்படுத்த தொடங்கிவிட்டது என்றால் அது மிகையல்ல. செய்தி, வீடியோ, போட்டோஸ், பாடல் கேட்பது, டைம் பார்ப்பது, முக்கியமான தேதிகளை குறித்து வைப்பது, ஃபேஸ்புக், ஜிமெயில், கேம் என எதற்கெடுத்தாலும் செல்போனில் பயன் இன்றியமையாதது.
இந்த அளவுக்கு டிஜிட்டல் மயம் முக்கியத்துவமானதாக இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் தொல்லைகளாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. செல்போனை பொறுத்தவரை மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையில் ஒன்று ஸ்பேம் கால். வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு இந்திய பயனர்கள் ஸ்பேமர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். விடாமல் துரத்தும் ஸ்பேம் அழைப்புகளை தடை செய்தாலும், வேறொரு எண்ணின் மூலம் மீண்டும் தொடர்புகொண்டு நம்மை தொந்தரவு செய்யும். ஒரு வகையான புது நெம்பர் போன்றே இருக்கும். ஆனால் அட்டெண்ட் செய்த பிறகுதான் அது ஸ்பேம் கால் என்றே தெரியவரும்.
இத்தகைய இன்னல்களிலிருந்து அவ்வபோது தவிர்க்கவே ட்ரூக்காலர் போன்ற செயலிகள் பேருதவியாக இருக்கிறது. அதில் ஸ்பேம் கால் என்றால் முன்னதாகவே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் ஸ்பேம் கால் குறித்து ட்ரூ காலர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், உலக அளவில் ஸ்பேம் கால்களை எதிர்கொள்வதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது
அதில், “ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 17 ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில், ஒரு ஸ்பேமர் மூலம் 202 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் கால்கள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 6,64,000 ஸ்பேம் கால்களையும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 27,000 ஸ்பேம் கால்களையும் இந்தியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உலாவும் ஸ்பேம் அழைப்புகளில் 93.5% விற்பனை மற்றும் டெலி மார்க்கெட்டிங் சார்ந்த கால்கள். மற்றைவை அனைத்து வங்கி சார்த்த சேவைகளில் மக்களை ஏமாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அழைப்புகள்.
உலகில் அதிக ஸ்பேம் கால்கள் செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பெருவும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.