APPLE: நீண்ட கால ரகசியத்தை போட்டுடைத்த ஆப்பிள் நிறுவனம்.. ஐபோன் கேமரா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..
பிரபல ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாக சோனி நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றி வருவதை, முதன்முறையாக பொதுவெளியில் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதுமே ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ஏகப்பட்ட மவுசு உண்டு. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பாதுகாப்பாகவும் , நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் பயனாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நம்பிக்கை. அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்டது, புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதனை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் பிரியர்கள் ஏராளம். பலரும் ஐபோன் , ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் பேரில் ஐபோன்கள் விற்கப்பட்டாலும், அவற்றிற்கான பாகங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் தனித்தனியாகவே உருவாக்கப்படுகிறது. அதைதொடர்ந்து, வேறு இடத்தில் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, செல்போனாக உலக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னணி நிறுவனங்களுடனும் ஆப்பிள் நிறுவனம் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு கூட்டாக செயல்பட்டு வருகிறது.
We’ve been partnering with Sony for over a decade to create the world’s leading camera sensors for iPhone. Thanks to Ken and everyone on the team for showing me around the cutting-edge facility in Kumamoto today. pic.twitter.com/462SEkUbhi
— Tim Cook (@tim_cook) December 13, 2022
சோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் ஆப்பிள்:
அந்த வகையில், ஆப்பிள் ஐபோன்கள் சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துகின்றன என்பதை, ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் ட்வீட் மூலம் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நாங்கள் ஐபோனுக்கான உலகின் முன்னணி கேமரா சென்சார்களை உருவாக்க சோனியுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து பணியாற்றுகிறோம். குமாமோட்டோவில் உள்ள அதிநவீன வசதியை எனக்குக் காட்டியதற்காக கென் மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி. சோனியின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சிரோ யோஷிடாவு, ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் உள்ள தங்களது அலுவலகத்தை சுற்றிக் காட்டியதற்கு நன்றி என கூறி, ஆப்பிள் ஐபோனின் சென்சாரை ஆய்வு செய்து, அந்த தொழில்நுட்பம் தொடர்பாக விவாதித்தது குறித்த புகைப்படம் ஒன்றையும் டிம் குக் வெளியிட்டுள்ளார்.
ரகசியம் காக்கும் ஆப்பிள்:
பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் நிலையில், சோனி உடனான ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேமரா விவரக்குறிப்புகள், அபெர்ட்சர், தெளிவுத்திறன், பார்வைக் களம் மற்றும் பிற பொதுவான தகவல்களை மட்டுமே வெளிப்படையாக கூறும் ஆப்பிள் நிறுவனம், வடிவமைப்பு மற்றும் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றையே ரகசியமாகவே பாதுகாத்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மாடலிலேயே சோனி நிறுவனத்தின் 2 சென்சார்கள் இருப்பதாக, 2015ம் ஆண்டே பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதுகுறித்து அப்போது எந்த பதிலும் அளிக்காத ஆப்பிள் நிறுவனம், தற்போது சோனி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்துள்ளது. சிஎம்ஓஎஸ் இமேஜ் சென்சார்களில் 44% சந்தை பங்குடன் சோனி இமேஜ் சென்சார் முதலிடத்திலும், 18.5 சதவீத சந்தைப் பங்குடன் சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
விரிவடைந்தது ஆப்பிளின் சந்தை:
ஆப்பிள் மற்றும் சோனி இடையேயான ஒப்பந்தம் தொடரும் மற்றும் சோனி கேமராக்களின் புதிய மாடல்கள் அடுத்து வர உள்ள ஐபோன் மாடல்களிலும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தனது ஜப்பானிய விநியோக நெட்வொர்க்கில், ரூ.8.25 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கான சப்ளையர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு முதல் 30% அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வணிக நிறுவனங்கள் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் வரை ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஜப்பானில் ஐபோன் தயாரிப்புகளுக்கான கேமரா சென்சார்களை வழங்கும், மிகப்பெரிய சப்ளையர்களில் சோனி குரூப் கார்ப் ஒன்றாக உள்ளது.