Apple iPhone 13: எந்தெந்த நாடுகளில் எவ்வளவு விலைக்கு வாங்கலாம்... எப்போது வாங்கலாம்?
Apple iPhone 13: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் iPhone 13 Pro மாடலை 1,19,900 ரூபாய் விலைக்கும், iPhone 13 Pro Max மாடலை 1,29,900 ரூபாய் விலைக்கும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம் என அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் iPhone 13 மாடல் குறித்த விலை, இருப்பு விவரங்கள் முதலானவற்றை அறிவித்துள்ளது. இந்தியப் பயனாளர்கள் iPhone 13 Pro மாடலை 1,19,900 ரூபாய் விலைக்கும், iPhone 13 Pro Max மாடலை 1,29,900 ரூபாய் விலைக்கும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா முதலான 30 நாடுகளிலும், பகுதிகளிலும் iPhone 13 Pro, iPhone 13 Pro Max ஆகிய மாடல்களை வரும் செப்டம்பர் 17 முதல் முன்பதிவு செய்யலாம் எனவும், அதன் கையிருப்பும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதும் செப்டம்பர் 24 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
iPhone 13 Pro, iPhone 13 Pro Max ஆகிய இரு மாடல்களும் கிராஃபைட், கோல்ட், சில்வர், சியர்ரா ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகின்றன. iPhone 13, iPhone 13 mini ஆகிய மாடல்களின் விலை கடந்த ஆண்டில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், முறையே 79,900 ரூபாய்க்கும், 69,900 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவும் செப்டம்பர் 17 அன்று முதல் தொடங்குகிறது.
iPhone 13, iPhone 13 mini ஆகிய 2 மாடல்களும் பிங்க், ப்ளூ, மிட் நைட், ஸ்டார்லைட், ரெட் ஆகிய நிறங்களில் விற்கப்படவுள்ளன. தற்போது புதிதாக வந்துள்ள iPhone 13, iPhone 13 mini மாடல்களில் அதிக டிஸ்ப்ளே ஏரியா வழங்கப்பட்டு, அதன் நாட்ச் சுமார் 20 சதவிகிதம் முன்பை விடச் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் Super Retina XDR டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட 28 சதவிகிதம் அதிகம் brightness இதில் இருக்கும். இதன் அளவு 6.1 இன்ச்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iPhone 13 மாடலில் சேர்க்கப்பட்டுள்ள புதிய A15 Bionic chipset காரணமாக, மற்ற ஃபோன்களை விட இது 50 சதவிகிதம் வேகமாக செயல்படுவதோடு, 30 சதவிகித மெருகேற்றப்பட்ட கிராபிக்ஸ் அனுபவத்தையும் அளிக்கும்.
பயோமெட்ரிக் வசதிகளைப் பொருத்த வரை, iPhone 13 மாடலின் பவர் பட்டனில் Touch ID இருப்பதோடு, Face ID அம்சமும் இடம்பெற்றுள்ளது. iPhone 13 கேமராவில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன. ப்ரைமரி கேமரா சென்சார் 12MP f/1.6 அம்சமும், அல்ட்ரா வைட் லென்ஸ் 12MP f/2.4 அம்சமும் கொண்டது. இதில் அல்ட்ரா வைட் லென்ஸ் மூலம் 120 டிகிரி சுற்றுப்புறத்தைப் படம் எடுக்க முடியும்.
இதிலுள்ள ப்ரைமரி கேமராவின் சென்சாரில் sensor-shift stabilisation அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு வெளியான மாடல்களை விட, iPhone 13 மாடலில் பெரியளவிலான பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.