Iphone 15 Series: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸில் உள்ள புதிய அம்சங்கள் என்ன? டைப் சி-சார்ஜர் உள்ளிட்ட அப்டேட்கள் இதோ..
Apple Iphone 15 Series: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Apple Iphone 15 Series: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இதுவரை இல்லாத வகையில், சி-டைப் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கியது. அதில், 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 என புதியதாக இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் வெளியாகியுள்ளன.
ஐபோன் 15 வடிவமைப்பு:
ஐபோன் 15 சீரிஸ் மாடல் வடிவமைப்பில் முந்தையை மாடலை அப்படியே பின் தொடர்கிறது. அதாவது ஐபோன் 14 மாடலில் இருந்த அதே பாக்ஸ் போன்ற வடிவத்தில் பின்புறத்தில் டியூவல் கேமராக்களை கொண்டுள்ளன. இவை, இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது USB வடிவிலான சி டைப் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன்களின் பிரத்யேக சார்ஜரை கட்டாயம் பயன்படுத்தும் பிரச்னை பயனாளர்களுக்கு இனி இருக்காது. அபோன் 14ப்ரோ மாடலில் இருந்த பஞ்ச்- ஹோல் டிஸ்பிளே மாடல் தற்போது ஐபோன் 15 சீரிஸின் ஸ்டேண்டர்ட்ர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. மியூட் சுவிட்ச் பட்டனுக்கு பதிலாக ஆக்ஷன் சுவிட்ச் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இது ஷார்ட் கட் மற்றும் பியூட்கர்களை எளிதில் அணுக உதவுகிறது. கேமரா உள்ளிட்ட அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஐபோன் 15 ஸ்டேண்டர்ட் மாடல் விவரங்கள்:
ஐபோன் 14 மாடலில் இருந்த அதே டிஸ்பிளே அம்சங்கள் ஐபோன் 15 ஸ்டேண்டர்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 15 மாடலில் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவும், பிளஸ் மாடலில் 6.7 இன்ச் ட்டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேண்டர்ட் மற்றும் ப்ளஸ் மாடலில் கேமராக்கள் தான் மிகப்பெரிய மாற்றங்கள் கண்டுள்ளன. அதன்படி, ஸ்டேண்டர்ட் மற்றும் பிளஸ் மாடல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலில் இருந்த 12 மெகாபிக்சல் இரட்டை கேமரா அமைப்பை விட பெரிய மாற்றம் ஆகும். சிறந்த கேமரா அனுபவத்திற்காக புதிய நைட் மோட், ஸ்மார்ட் HDR மோட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4K வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். மேம்படுத்தப்பட்ட bokeh effects மற்றும் வேகமான ஷட்டர் ஸ்பீடில் புதிய போர்ட்ரெய்ட் மோட்டையும் கொண்டுள்ளது.
வாய்ஸ் ஐசோலேஷன் (voice isolation )
முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, f/1.6 அபெர்ட்சூர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்டுள்ளது. கூடுதலாக, ஹைகுவாலிட்டி செல்ஃபிகள் மற்றும் ஃபேஸ் ஐடி திறன்களுக்காக 12-மெகாபிக்சல் TrueDepth அம்சத்திலான கேமராவைக் கொண்டுள்ளது. 14ப்ரோ மாடலில் காணப்பட்ட A16 பயோனிக் சிப்செட் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரியின் செயல்பாடு நாள் முழுவதும் நீடித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள voice isolation ஆப்ஷனை பயன்படுத்தி, தெளிவாக உரையாட முடியும். ஐபோன் 15 மற்றும் பிளஸ் மாடலுக்கு உள்ள ஒரே வேறுபாடு டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி மட்டுமே ஆகும்.
ஐபோன் 15 ப்ரோ வடிவமைப்பு:
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இலகுவான, அதிக நீடித்த டைட்டானியம் சேஸிஸை கொண்டுள்ளது. கைரேகை கறைகளை குறைக்க பிரஷ்டு விளைவைக் கொண்டுள்ளன. உலோகம் கண்ணாடியைச் சந்திக்கும் இடத்தில் சாதனத்தின் விளிம்புகள் மென்மையாகவும் வட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுளது. சி டைப் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய ப்ரோ மேக்ஸ் மாடலில் காணப்பட்ட 6.7 இன்ச் ஓஎல்இடி திரையையும், ப்ரோ பதிப்பில் 6.1 இன்ச் திரையையும் ஆப்பிள் நிறுவனம் புதிய மாடலிலும் தொடர்கிறது . இரண்டு ப்ரோ மாடல்களும் ProMotion தொழில்நுட்பத்துடன் கூடிய Super Retina XDR டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது. அவை எப்போதும் இயங்கும் காட்சி அம்சம் மற்றும் iOS 17 இல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட StandBy பயன்முறை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன.
A17 ப்ரோ சிப்:
ப்ரோ மாடல்கள் இரண்டிலும் A17 ப்ரோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் கிடைக்காத செயல்திறனையும், உயர்தர கணினிகளுக்கு இணையாக செயல்படும் திறனையும் ஐபோன்களுக்கு வழங்கும் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட, உயர் ரக கேமிங் அனுபவங்களை பெறும் வகையிலும் ப்ரோ மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன்கள் கருப்பு டைட்டானியம், வெள்ளை டைட்டானியம், நீல டைட்டானியம் மற்றும் இயற்கை டைட்டானியம் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் உள்ள கேமரா அமைப்பு "உங்கள் பாக்கெட்டில் உள்ள ஏழு கேமரா லென்ஸ்களுக்கு சமம்" என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் குறைந்த ஒளியிலும் தரமான புகைப்படங்களை எடுக்கும் வகையிலான 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.