Sandya Devanathan : அதிரடி.. மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்..
மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளை உள்ளடக்கிய, மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவரான அஜித் மோகன், வேறு ஒரு நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து, வாட்ஸ்-அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்திய பிரிவின் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநராக இருந்த ராஜீவ் அகர்வால் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மெட்டா வணிகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும், இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, மெட்டாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க, நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் முன்னுரிமைகளை ஒன்றிணைப்பதில் சந்தியா தேவநாதன் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meta announced the appointment of Sandhya Devanathan as the Vice President of Meta India.
— ANI (@ANI) November 17, 2022
(Pic credit: Sandhya Devanathan LinkedIn account) pic.twitter.com/zR7yhi4RgM
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தனது புதிய பொறுப்பை சந்தியா ஏற்பார் எனவும், மெட்டாவின் ஆசிய பசிபிக் சந்தையின் துணைத்தலைவரான டான் நியரிக்கு கீழ் அவர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் சந்தையின் தலைவர்களில் ஒருவராகவும் தொடர உள்ள சந்தியா தேவநாதன், மெட்டாவின் நிர்வாகப் பணிகளுக்காக விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஆசிய பசிபிக் சந்தைக்கான பேஸ்புக்கின் கேமிங் தலைவராக சந்தியா பொறுப்பு வகித்து வருகிறார்.அவர் பொறுப்பேற்கும் வரையில், பேஸ்புக்கின் இந்திய பிரிவுக்கான இயக்குனரான, மணீஷ் சோப்ரா மெட்டா நிறுவனத்தை வழி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவி ஆன சந்தியா தேவநாதன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.டெக் முடித்ததோடு, டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ-படிப்பை பூர்த்தி செய்தார். சிட்டி வங்கியில் 9 ஆண்டுகள் பணிபுரிந்ததை தொடர்ந்து, ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியில் 6 ஆண்டுகள் முதன்மை அதிகாரிகள் ஒருவராக பணியாற்றினார். பின்னர், 2016ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்த சந்தியா, வியாட்நாம், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆன்லைன் வணிகத்தில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். வங்கி, பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப துறையில் 22 ஆண்டுகள் அனுபவமுள்ள சந்தியா தேவநாதனின் தலைமையில், மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கபப்டுகிறது.