ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புத்தாண்டில் தனது 100வது திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ISRO 100th Mission: புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில், தனது 100வது திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் 100வது திட்டம்:
இந்தியா விண்வெளியில் இரண்டு தனித்தனி செயற்கைகோள்களை ஒன்றாக இணைக்கும் முதல் சோதனைக்கான, ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்களை பிஎஸ்எல்விசி60 ராக்கெட் மூலம் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், இந்த வெற்றியை மேலும் கொண்டாடும் விதமாக, 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த உள்ள முதல் திட்டம் இஸ்ரோவின் 100 வது விண்வெளி ஆராய்ச்சி பணியாக இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் எஸ் சோமநாத் அறிவித்தார். இந்த திட்டம் ஜனவரியில் இருக்கும் என அறிவித்தாலும், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் வெளியிடப்பவில்லை.
100வது விண்வெளி ஆராய்ச்சி திட்டம் என்ன?
இஸ்ரோவின் 100வது விண்வெளி ஆராய்ச்சி பணியானது ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் அல்லது ஜிஎஸ்எல்வி எம்கே-II ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்ரோவால் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வரும் இந்திய செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பைச் சேர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த பணிக்கு GSLV-F15/NVS-02 மிஷன் என்று பெயரிடப்படும். பேலோட் IRNSS-1K செயற்கைக்கோளானது இந்தியாவின் வழிசெலுத்தல் செயற்கைக்கோள் தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
NVS அல்லது நேவிகேஷன் சாட்டிலைட் (Navigation Satellite) என்பது, இந்தியாவின் உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் (Global Navigation Satellite Systems) அமைப்பாகும். அதாவது உலகளவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் அல்லது ஜிபிஎஸ் போன்றது.
GSLV-F15/NVS-02 பணி & நோக்கங்கள்
ஜிஎஸ்எல்வி-எஃப்15 இந்தியாவின் 17வது ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ராக்கெட்டாக இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு கிரையோஜெனிக் நிலையுடன் கூடிய ஜிஎஸ்எல்வியின் (11வது ஒட்டுமொத்த விமானம்) 8வது செயல்பாட்டு ராக்கெட்டாகவும் இருக்கும்.
- துல்லியமான ராணுவ நடவடிக்கை
- மூலோபாய பயன்பாடுகள்
- நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடல் வழிசெலுத்தல்
- துல்லியமான விவசாயம்
- புவிசார் ஆய்வு
- அவசர சேவைகள்
- கடற்படை மேலாண்மை
- மொபைல் சாதனங்களில் இருப்பிட அடிப்படையிலான சேவைகள்
- செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம்
- கடல் மீன்வளம்
- அரசு நிறுவனங்களுக்கான நேரச் சேவைகள்
- இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) அடிப்படையிலான பயன்பாடுகள்
குளோபல் நேவிகேஷன் சிஸ்டம்:
தற்போது நான்கு குளோபல் நேவ்கேஷன் அமைப்புகள் மட்டுமே உள்ளன. அதன்படி, அமெரிக்காவிலிருந்து GPS, ரஷ்யாவிலிருந்து GLONASS, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கலிலியோ மற்றும் சீனாவில் இருந்து BeiDou செயல்பாட்டில் உள்ளன். இந்தியாவின் NavIC மற்றும் ஜப்பானின் QZSS ஆகியவை இன்னும் பிராந்திய அளவில் மட்டுமே உள்ளன, ஆனால் எதிர்காலத்தில் உலகளாவியதாக மாறும்.