Aditya L1: சூரியனை ஆராயும் ஆதித்யா.. 4 மாதங்களில் 15 லட்சம் கி.மீ., பயணிப்பது எப்படி? லெக்ராஞ்சி, ஹாலோ ஆர்பிட் என்றால் என்ன?
சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 விண்கலம் எப்படி பயணிக்க உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 விண்கலம் எப்படி பயணிக்க உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஆதித்யா எல்1 விண்கலம்:
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து அடுத்த இலக்காக சூரியனை ஆய்வு செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதற்காக ஆதித்யா எல்1 எனும் விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நோக்கம் என்ன?
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது 15 கோடி கிலோ மீட்டர் தூரமாகும். இந்த இலக்கை அடையும் அளவிலான அதிநவீன தொழில்நுட்பம் என்பது இதுவரை எந்த நாடும் கண்டறியவில்லை. எனவே, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம்.
பயண திட்டம்:
ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர். இந்த இலக்கை அடைய சந்திரயான் 4 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம், 4 மாதங்கள் பயணித்து லெக்ராஞ்சியப் புள்ளி எனும் இலக்கை அடைய உள்ளது. அங்கு ஹாலோ ஆர்பிட்டில் ஆதித்யா எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு சூரியனின் மேற்பரப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை திரட்ட உள்ளது.
பயண விவரம்:
பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் 100 பூமி நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைய உள்ளது. அதன் முதற்கட்டமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், முதலில் சில காலம் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும். பின்பு, புவி சுற்றுவட்டப்பாதையின் தாழ்வான பகுதியில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். தொடர்ந்து, அந்த சுற்றுவட்டப்பாதை மேலும் நீள்வட்டமாக அமையும் வகையில் செயற்கைக்கோள் பயணத்தை தொடரும். அதன் பிறகு தேவையான நீள்வட்டப்பாதை இலக்கை அடைந்த பிறகு, புரபல்சன் அமைப்பை பயன்படுத்தி உந்துதல் கொடுக்கப்பட்டு விண்கலம் லெக்ராஞ்சியப் புள்ளியை நோக்கி உந்தி தள்ளப்படும்.
அப்போது புவியின் ஈர்ப்பு விசை தாக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறிய பிறகு தான் முக்கிய பணி தொடங்கும். அதன்படி, எல்1 எனப்படும் லெக்ராஞ்சிய புள்ளியை மையமாக கொண்ட ஹாலோ ஆர்பிட்டை நோக்கி விண்கலம் படிப்படியாக செலுத்தப்படும். இவ்வாறு ஆதித்யா எல்1 விண்கலம் மொத்தமாக கடக்க உள்ள தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது நிலவிற்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட 4 மடங்கு அதிகம். அந்த இலக்கை அடைந்த பிறகு உருவாக்கப்படும் சுற்றுவட்டப்பாதையில் தான் 5 ஆண்டுகளுக்கு ஆதித்யா விண்கலம் பயணிக்க உள்ளது.
லெக்ராஞ்சியப் புள்ளி என்றால் என்ன?
இரண்டு பெரும் வான்பொருட்களின் சுற்றுப்பாதைகளின் இடையே, அவற்றின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய புள்ளி தான் லெக்ராஞ்சியப் புள்ளி என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில், இரு பெரும் வான்பொருட்களின் ஈர்ப்புவிசைகளின் கூட்டுவிசையால், சிறுபொருள் அவற்றைச் சுற்ற தேவையான மையநோக்கு விசையைத் தருகின்றது. இரண்டு பெரிய வான்பொருட்களின் சுற்றுப்பாதை தளத்தில் இத்தகைய புள்ளிகள் ஐந்து உள்ளன. அவற்றில் எல்1,எல்2 மற்றும் எல் 3 ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்பதை பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெக்ராஞ்சி என்பவர் கண்டறிந்தார். சூரியன் மட்டுமின்றி வியாழன் போன்ற மற்ற கிரகங்களுக்கும் இதுபோன்ற லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன.
ஹாலோ ஆர்பிட் என்றால் என்ன?
ஹாலோ ஆர்பிட் என்பது முதல் மூன்று லெக்ராஞ்சிய புள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள ஒரு முப்பரிமாண சுற்றுவட்டப்பாதையாகும். வழக்கமாக மனிதர்கள் செலுத்தும் செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஒரு கோள் அல்லது துணைக்கோள் பயணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் தான் பயணிக்கும். ஆனால், இந்த ஹாலோ ஆர்பிட்டில் எந்த ஒரு இயற்கையான கோளோ அல்லது துணைக்கோளோ இருப்பது இல்லை. ஆனால், லெக்ராஞ்சிய புள்ளிகளுக்கு உள்ள விநோதமான தனித்தன்மை காரணமாக, அங்கு எழும் மைய நோக்கு விசையை பயன்படுத்தி செயற்கைகோள்கள் நீள்வட்டப்பாதையில் பயணித்து வருகின்றன.
3வது நாடு இந்தியா?
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.