Google year in search 2021: வீட்டில் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? 2021ல் இந்தியர்கள் கூகுளில் தேடிய டாப் 10 செர்ச் பட்டியல்!
2021ம் ஆண்டு கூகுளில் இந்தியர்கள் தேடிய டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் வீட்டிலே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? என்பது 5வது இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் இணையதள சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் இணைய சேவையை பிரதானமாக வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் அந்தந்த ஆண்டுகளில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியலை வழங்கி வருகிறது.
இதன்படி, இந்தியாவில் 2021ம் ஆண்டு கூகுளில் அதிகளவில் தேடப்பட்டவைகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொடர்பாகவும், கொரோனா சான்றிதழை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றியும் கூகுளில் தேடியுள்ளனர். கூகுள் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் மிகவும் விநோதமான செய்தி என்னவென்றால், இந்தியாவில் பெரும்பாலோனோர் வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? என்று தேடியிருப்பதுதான்.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள கூகுளில் தேடப்பட்ட டாப் 10 விஷயங்கள் :
1 .கொரோனா சான்றிதழுக்கு எவ்வாறு பதிவு செய்வது?
2. கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
3.ஆக்சிஜன் அளவை எவ்வாறு இறக்குமதி செய்வது?
4. ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் எவ்வாறு இணைப்பது?
5.வீட்டிலே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி?
6. இந்தியாவில் டாக் காயின் வாங்குவது எப்படி?
7. வாழைப்பழ ப்ரட் தயாரிப்பது எப்படி?
8. ஐ.பி.ஓ.( ஆரம்ப பொது வழங்கல்) ஒதுக்கீடு நிலவரத்தை எப்படி பரிசோதிப்பது?
9. பிட்காயினில் எப்படி முதலீடு செய்வது?
10. மதிப்பெண்களுக்கான சதவீதத்தை எவ்வாறு கணக்கிடுவது?
இந்தியா முழுவதும் செய்திகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மேற்கண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில் ஆயிரக்கணக்கானோர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழந்ததும், டெல்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவியதும், ஆக்சிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தருணத்தில்தான் இந்தியர்கள் பலரும் வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி? என்று கூகுளில் தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்