அதிகாரிகளின் இ-மெயிலை துலாவும் தலிபன்கள் - கணக்குகளை முடக்கிய கூகுள்!
முன்னாள் ஆஃப்கன் அதிகாரி ஒருவர் தாலிபன்கள் அவர் பணிபுரிந்த அமைச்சகத்தின் சர்வரில் சேமிக்கப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என பணித்ததாகவும் கூறினார்.
பிரபல கூகுள் நிறுவனம் ஆஃப்கானிஸ்தான் அரசினின் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் பங்குதாரர்களின் மின்னஞ்சல் கணக்குகளை முடக்கியுள்ளது. தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்தவுடன் அங்கு நிலை தலைகீழாகிவிட்டது. ஆஃப்கானிஸ்தான் அதிபர் உட்பட பல அரசு அதிகாரிகள் அங்கிருந்து தப்பித்து அமெரிக்கா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துவிட்டனர். இந்நிலையில் அங்கிருந்த அரசு அதிகாரிகளில் பயோமேட்ரிக் டேட்டா பேஸை தாலிபன்கள் கைப்பற்றி , அதன் மூலம் அவர்களில் எதிரிகளை அழிக்கலாம் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பிரபல கூகுள் நிறுவனம் தாலிபன்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய சில அதிகாரிகளின் கணக்குகளை எந்தவொரு அறிவிப்பும் இன்றி முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம், “ஆஃப்கானிஸ்தானின் அடுத்தடுத்த நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருவதால்தான் தற்காலிகமாக முன்னாள் அரசு அதிகாரிகளின் மின்னஞ்சல் கணக்குகளை முடக்குவதற்கு முடிவெடுத்தோம்” என தெரிவித்தது. முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளில் ஒருவர் தலிபன்கள், அரசு அதிகாரிகளின் மின்னஞ்சல் டேட்டாவை கைப்பற்ற முயற்சித்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தலிபன்கள் அவர் பணிபுரிந்த அமைச்சகத்தின் சர்வரில் சேமிக்கப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என பணித்ததாகவும் கூறினார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவ்வாறு அவர் செய்திருந்தால், அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல்கள் அனைத்தையும் தலிபன்கள் கைப்பற்றி பின்னர் பொதுவெளியில் வெளியிட நேர்ந்திருக்கலாம் என கருதியதாகவும் கூறினார். அங்கிருந்து தப்பித்த அந்த நபர் எங்கிருக்கிறார். அவர் எந்த அமைச்சரவையில் பணியாற்றினார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இந்நிலையிலேயே கூகுள் நிறுவனம் இந்த முடிவுகளை எடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிய நாடு என்பது நாம் அறிந்ததே. மேலும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுளின் , மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியே ஆஃப்கானிஸ்தான் அரசின் தொழில்முறைகள், கல்வி, பொருளாதாரம் என 24 துறைகளை சேர்ந்த அதிகார்கள் கூகுள் மெயிலை பயன்படுத்தியுள்ளனர். இவ்வளவு ஏன் presidential protocol கூட ஜி-மெயில் மூலமே செயல்பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஃப்கானின் நாணய மதிப்பு கடுமையாக சரிந்திருக்கிறது. பணம் இல்லாதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. கிட்டத்தட்ட தற்போதைய வங்கி முறை திவாலும் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. ஒரு வேளை வங்கிகள் திறந்தால் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதும் வங்கிகளை திறக்காததற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் வங்கிகள் திறக்காத்தால் பணப்பரிமாற்றம் நடக்கவில்லை. மக்களிடம் பணம் இல்லை. பெரும் அழிவு நடப்பதற்கான ஆரம்பகாலத்தில் இருப்பதாக அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது தற்போதைய சூழல் பெரும் வறட்சியும் கடுமையான சிக்கலையும் உருவாக்ககூடும் என அஞ்சப்படுகிறது.