Facebook | ''ஹாய்.. எப்டி இருக்கீங்க? ஜி பே இருக்கா?'' - பேஸ்புக்கில் சுற்றும் மோசடி கும்பல்!
தொடக்கத்தில் பேக் ஐடி மூலம் நண்பராகி நேரில் வரவழைத்து பணம் பிடுங்கும் கும்பல் இப்போது அப்டேட்டாகி இன்பாக்ஸை தட்டுகிறார்கள். அதுவும் பிரபலமானவர்கள் பெயரிலும், நமது நண்பர்கள் பெயரிலும்.
இப்போதெல்லாம் செல்போன் என்பது பேச மட்டுமல்ல. ஸ்மார்ட் போனில் பேசுவது ஒரு ஆப்ஷன் தான். அதுபோக கேம், பண பரிவர்த்தனை, பங்கு சந்தைகள், கேமரா பயன்பாடுகள், சோஷியல் மீடியா என ரெஸ்ட் இல்லாமல் உழைக்கிறது பலரது செல்போன்கள். மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்பசோஷியல் மீடியாவும் தங்களை அப்டேட் செய்துகொண்டே வருகிறது. பொழுதுபோக்கு என தொடங்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா பக்கங்கள் இன்று அரசியல் தளமாகவும், வருமானம் ஈட்டும் சந்தையாகவும் மாறியுள்ளது. வணிக ரீதியாக பயனாளர்களையும் பயன்படுத்திக்கொண்டு அடுத்தக்கட்ட நோக்கி பாய்கின்றன இந்த சோஷியல் மீடியாக்கள். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி திருடும் நூதன கும்பல்கள் பலரும் கூடும் சோஷியல் மீடியாவை சும்மா விடுவார்களா? தொடக்கத்தில் பேக் ஐடி மூலம் நண்பராகி நேரில் வரவழைத்து பணம் பிடுங்கும் கும்பல் இப்போது அப்டேட்டாகி இன்பாக்ஸை தட்டுகிறார்கள். அதுவும் பிரபலமானவர்கள் பெயரிலும், நமது நண்பர்கள் பெயரிலும்.
தெரிந்த பழக்கப்பட்ட ஒரு நண்பரிடம் இருந்து ஹாய்.. எப்படி இருக்கீங்க? என இன்பாக்ஸில் மெசேஜ் வந்து விழுகிறது. அட நண்பராச்சே என்றே பேச்சு கொடுத்தால் அவசரமாக பணம் தேவை. காலையில் தருகிறேன் என அந்த சாட் செல்கிறது. உடனடியாக ஒரு ஜிபே அல்லது போன்பே நம்பரும் கொடுக்கப்படுகிறது. அல்லது வங்கிக்கணக்கு. கொஞ்சமும் யோசிக்காமல் நண்பர் தானே.. அவசரம் போல என பணத்தை அனுப்பிய பலருக்கு பின்னர் தான் தெரிகிறது இது மோசடி கும்பலின் சதிவலை என. இப்படியும் நடக்குமா என சுதாரிப்பதற்குள் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பணம் பறித்துவிடுகிறது பேக் ஐடி கும்பல்.
அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்
என்னதான் நடக்கிறது?
பேஸ்புக்கில் ஆக்டீவாக இருக்கும், அதிக நண்பர்களை கொண்டுள்ள ப்ரபைல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவர்கள் பேஸ்புக் பிரலமாகவோ அல்லது உண்மையான பிரபலமாகவோ இருக்கலாம்.அவர்கள் பெயரில் போலிக்கணக்கு தொடங்கி கண்மூடித்தனமாக பலருக்கும் ரெக்கவுஸ்ட் கொடுக்கப்படுகிறது. பின்னர் பலருடன் சேட் தொடரப்படுகிறது. இதில் சிக்கும் சிலரிடம் பண உதவி கேட்கப்படுகிறது. மோசடி கும்பலின் சதி தெரிந்து சிலர் சுதாரித்துக்கொண்டாலும், சிலர் சிக்கிக்கொள்கின்றனர்
என்ன செய்ய வேண்டும்?
முதலில் இந்த சோஷியல் மீடியா மாய உலகம் என்பதை மனதில் வையுங்கள். அங்கு நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக பண பரிவர்த்தனைகள் தொடர்பான சங்கதிகளை சோஷியல் மீடியாக்களில் வைத்துக்கொள்ளவே வேண்டும். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் பெயரில் பண உதவி கேட்டு மெசேஜ் வந்தால் அந்த நண்பரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுங்கள். நடந்த விவரத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவதால் உங்கள் நண்பரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வார். தொலைபேசி எண் இல்லை என்றால் அந்த பண உதவியை கண்டுகொள்ளாமல் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் செல்போன் எண்ணைக் கூட பகிர்ந்துகொள்ளாத ஒரு நட்புவட்டம் பண உதவி கேட்கப்போவதுமில்லை, நாம் கொடுக்க தேவையுமில்லை என்பதை உணருங்கள்.
அதேபோல் நம் பெயரில் பண உதவி கேட்கப்படுகிறது என தெரிந்தால் அது தொடர்பான நாம் ஒரு விழிப்புணர்வு போஸ்ட் போடலாம். இல்லையென்றால், நான் யாரிடம் பண உதவி கேட்கமாட்டேன். எனது பெயரில் அழைப்பு வந்தால் நிராகரிக்கலாம் என பொதுவான பதிவை நாம் அனைவருமே பதிவிட்டால் நண்பர்கள் உஷாராக இருப்பார்கள்.
இந்த புகார்கள் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் பேஸ்புக் பயனாளர்களாகிய நாமும் சற்று விழிப்புடன் இருந்தால் இதுபோன்ற மோசடியை தடுக்கலாம்.