அப்பாடா.. ஒரு வழியா பேச்சுவார்த்தை குழுவை அமைச்சுட்டாங்க.. திமுக குழுவில் யார் யார்.? பேச்சுவார்த்தை எப்போது.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- களம் இறங்கிய திமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. மேலும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளையும் எதிர்கட்சியான அதிமுக தீவிரப்படுத்தியது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த எந்தவித குழுவையும் அமைக்கவில்லை, ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என காத்திருந்தது.
பேச்சுவார்த்தை குழுவை அமைத்த திமுக
இதற்கிடையே ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக, தொகுதி பங்கீட்டு குழுவை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு கட்டத்தில் எப்போது பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும் என காங்கிரஸ் தலைமையிடம் இருந்து திமுகவிடம் கேட்கப்பட்டது. இதனையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால் குழுவினர் விவரம் வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் நாளை முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவை திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
குழு தலைவர் :
கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு
குழு உறுப்பினர்கள் :
கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர் தி.மு.க)
திருச்சி சிவா (துணைப் பொதுச்செயலாளர் தி.மு.க.)
ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர். தி.மு.க.)
ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க அமைப்புச் செயலாளர்)
எ.வ. வேலு (திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க உயர்நிலை செயய்திட்டக்குழு உறுப்பினர்)






















