Social Media Facebook: யாரு வேணா வரட்டும்..! ஆனா, ஃபேஸ்புக் இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.. யாராலும் வீழ்த்த முடியாதது ஏன்?
பெரும் பணக்காரர்களுமான மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையேயான போட்டிக்கு மத்தியில், ஃபேஸ்புக் செயலி சமுக வலைதள உலகத்தில் தொடர்ந்து கோலோச்சுவது ஏன் என்பதை இங்கு அறியலாம்.
பெரும் பணக்காரர்களுமான மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையேயான போட்டிக்கு மத்தியில், ஃபேஸ்புக் செயலி சமுக வலைதள உலகத்தில் தொடர்ந்து கோலோச்சுவது ஏன் என்பதை இங்கு அறியலாம்.
த்ரெட்ஸ் - டிவிட்டர்:
டிவிட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் எனும் செயலியை மெட்டா குழுமம் அறிவித்துள்ளது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள நுணுக்கங்கள், டிவிட்டரில் இருந்து திருடப்பட்டவை என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பெரும் பணக்காரர்களும், முக்கிய சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர்களுமான மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தசாப்தங்கள் கடந்தும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் செயலி தொடர்ந்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்து இங்கே அலசி ஆராயலாம்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம்:
ஒரு முக்கிய நிகழ்வினை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஆரம்பகால தகவல் பரிமாற்றம் என்பது பத்திரிகை. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அந்த தகவல் பரிமாற்றம் ரேடியோ, தொலைக்காட்சி என விரிவடைந்த நிலையில், அதன் உச்சகட்டமாக தற்போது சமூக வலைதளங்கள் உருவாகியுள்ளன. புவியின் மறுமுனையில் நடப்பதை கூட சென்னையில் ஒரு மூளையில் வசிப்பர்களால் நொடி நேரத்தில் அறிய முடிவதற்கு சமூக வலைதளங்களே காரணம். அத்தைகைய சமூக வலைதளங்களில் புதுப்புது அம்சங்களுடன் எத்தனையோ செயலிகள் அறிமுகமானலும் தனக்கான முதலிடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக்கும் - தொடரும் பழக்கமும்..
பொதுவாகவே கையில் இருக்கும் ஒரு பொருளை காட்டிலும், மேம்படுத்தப்பட்ட ஒரு பொருள் அறிமுகமானால் அதை பயன்படுத்தவே மக்கள் அதிக விருப்பம் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கும். எந்தவொரு சூழலிலும் அது ஒருநபரின் வாழ்வை விட்டு விலாகாது அவரின் அங்கமாகவே மாறி இருக்கும். அப்படி சமூக வலைதள துறையில் எத்தனையோ மேம்படுத்தப்பட்ட செயலிகள் வந்தாலும் இன்றும் நம்பர் ஒன் ஆக இருப்பது ஃபேஸ்புக் செயலி தான்.
ஃபேஸ்புக் கண்ட வெற்றி:
கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க் எனும் கல்லூரி மாணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பேஸ்புக் செயலியை அறிமுகப்படுத்தினார். புகைப்படங்களை பதிவிடுவது, குறுந்தகவல்கள் மூலம் உரையாடுவது என்பது போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகி, தற்போது பல்வேறு முக்கிய அம்சங்களுடன் பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாகவும் பேஸ்புக் செயலி உருவெடுத்துள்ளது.
அதிக பயனாளர்களை கொண்ட செயலி..!
ஒட்டுமொத்த சமூக வலைதள செயலிகளில் அதிகபட்சமாக பேஸ்புக் செயலி 300 கோடி மாதாந்திர பயனாளர்களை கொண்டுள்ளது. அதாவது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 சதவிகிதம் பேர் இந்த செயலியை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகின்றனர். 20 கோடி பயனாளர்கள் வர்த்தகத்திற்காக ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்துகின்றனர். 70 லட்சம் விளம்பரங்கள் இதில் ஒளிபரப்பப்படுகின்றன.
போட்டி நிறுவனங்கள்:
விளம்பர ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மற்றும் பயன்பாட்டு ரீதியிலும் மற்ற செயலிகளை காட்டிலும், ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா?. பேஸ்புக்கிற்கு போட்டியாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், வி-சாட் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில், பேஸ்புக்கிற்கு நேரடி போட்டியாக கருதப்படுவது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தான். பேஸ்புக் செயலிக்கு போட்டியாக இந்த செயலிகள் தோறுவிக்கப்பட்டு, பொதுமக்களிடையே தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தாலும் பேஸ்புக்கின் இடத்தை அவற்றால் எட்ட முடியவில்லை. அதற்கு போட்டி நிறுவனங்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கி கொண்டதே காரணமாக கருதப்படுகிறது.
டிவிட்டர்:
டிவிட்டர் செயலியை எடுத்துக்கொண்டால் அது செய்திகளை உடனடியாக தரக்கூடிய ஒரு செயலியாக அனைவராலும் அறியப்படுகிறது. பேஸ்புக்கை போல இந்த செயலியிலும் புகைப்படங்களை பகிரலாம், கருத்துகளை தெரிவிக்கலாம். ஆனாலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கானதாக இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், அரசியல் தலைவர்கள், அரசு அமைப்புகள், பெருநிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் போன்றவை ஏதேனும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் விளக்கம் போன்றவற்றை வழங்க டிவிட்டர் செயலியையே பயன்படுத்துகின்றன. இதனால், டிவிட்டர் செயலி என்பது எலைட் மக்களுக்கானது என்ற வலுவான மற்றும் பொதுவான ஒரு பிம்பம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த பிம்பம் தவிர்க்க முடியாததாகவும் மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம்:
இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள புகைப்படங்களை பகிர்வது, குறுந்தகவல் அனுப்புவது, கருத்துகளை தெரிவிப்பது போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனால், இந்த செயலியானது நடிகர், நடிகைகள், வர்த்தக மற்றும் நிறுவனங்களின் விளம்பரங்கள் போன்ற திரையுலக மற்றும் வர்த்தக கூடாரமாக உள்ளது. அதில் இடம்பெறும் புகைப்படங்களை பார்த்தாலே, ஆகா இது நமக்கானது அல்ல என்ற எண்ணத்தை சராசரி பயனாளர்களிடையே தோற்றுவிக்கிறது. இதன் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி இன்ஸ்டாகிராமால் அனைத்து தரப்பு மக்களிடையே சென்று சேரமுடியவில்லை.
ஃபேஸ்புக் எனும் ஆளுமை:
மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கிய போட்டி செயலிகளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை அடக்கிக் கொண்டதன் காரணமாகவே அவற்றின் வளர்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் விரிவடைய முடியாமல் தடுமாற்றம் காண்கிறது. ஆனால், அதுபோன்ற எந்தவொரு பிம்பமும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கானது என ஏற்றுக்கொள்ளப்பட்டது தான் ஃபேஸ்புக் செயலி. பக்கத்து தெருவில் இருப்பவர் முதற்கொண்டு உலகின் மறுபக்கத்தில் இருப்பவரையும் தொடர்புகொள்ள வாய்ப்பு கொடுத்த முதல் செயலி ஃபேஸ்புக். பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து தரப்பினராலும் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட ஒரு சமூக வலைதள செயலி. உள்ளூர் முதல் உலகம் வரையில், அரசியல் தொடங்கி விளையாட்டு வரை அனைத்து செய்திகளையும் இந்த ஒரே செயலியில் அறிந்து கொள்ள முடியும்.
பிரிவினை இல்லாத செயலி:
இன்று எலைட் மக்கள், திரைநட்சத்திரங்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தான் தங்களுக்கான சரியான தளம் என நகர்ந்து இருந்தாலும், இன்றளவும் அவர்கள் பயன்படுத்திய ஃபேஸ்புக் கணக்கு என்பது ஆக்டிவாக தான் உள்ளது. எந்த துறையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையயும் அலசி ஆராய்ந்து அதில் உள்ள உண்மைய அறிய உதவுவதோடு, பயனாளர் என்னதான் மோசமான மனநிலையில் இருந்தாலும் அவரை வாய்விட்டு சிரிக்க வைக்க பேஸ்புக் செயலியில் வரும் ஒரு மீம் போதுமானது. அத்தனைக்கும் மேலாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம் செயலிகளில் வெரிஃபைட் கணக்காளராக இருக்க, கட்டண முறை எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், ஃபேஸ்புக் செயலியில் இதுவரை அப்படி எந்தவொரு கட்டண முறையும் அறிமுகப்படுத்தவில்லை. டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை குறிப்பிட்ட மக்களுக்கானதாக மாறியுள்ளது. ஆனால், ஃபேஸ்புக் செயலி இன்றளவும் சராசரி மக்களுக்கானதாகவே உள்ளது. (உலகின் பெரும்பாலானோர் சராசரியானவர்கள் தான்) அதனால் தான், சமூக வலைதளங்களில் எத்தனையோ போட்டி செயலிகள் அறிமுகமானாலும், ஃபேஸ்புக் இஸ் ஆல்வேஸ் அல்டிமேட் எனும் நிலை இன்னும் தொடர்கிறது. தொடரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
(பின்குறிப்பு: சமூக வலைதளங்களில் ஜாம்பவான்களாக மாறியுள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகிய செயலிகள் தற்போது, மெட்டா குழுமத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் கீழ் தான் இயங்குகின்றன. )