Elon Musk: விரைவில் ட்விட்டர் (X)-இல் செய்யலாம் பண பரிமாற்றம்.. அதிரடி திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்..!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு மிகப்பெரிய தொகைக்கு வாங்கினார்.
எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்றம் தொடர்பான வசதி அறிமுகம் செய்யப்படும் என அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு மிகப்பெரிய தொகைக்கு வாங்கினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பெயர் ‘எக்ஸ்’ என மாற்றம் செய்யப்பட்டது. ட்விட்டரின் அடையாளமாக திகழ்ந்த நீல நிற பறவை நீக்கப்பட்டது. தொடர்ந்து பணம் செலுத்தினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இவர்கள் மட்டுமே 10,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யலாம் என பல வசதிகளை அறிமுகம் செய்தார்.
மேலும் அரசு பிரதிநிதிகள், அரசாங்கம் தொடர்பான கணக்குகளுக்கு தனித்தனியாக நிறங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் எக்ஸ் செயலியில் உணவுகளை ஆர்டர் செய்தல், பணம் அனுப்புதல் போன்றவற்றை ஒரே செயலியில் மேற்கொள்ளும் வகையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். அதேசமயம் பிற சமூக வலைத்தளங்களில் இருக்கும் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தது மிகப்பெரிய அதிருப்தியை உண்டு பண்ணியது.
மேலும் வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்து மாற்றங்களை கண்டு வரும் எக்ஸ் வலைத்தளத்தில் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி தற்போது பண பரிமாற்றம் செய்யப்படும் வசதி அறிமுகமாகவுள்ளது. இதுதொடர்பான தகவலை தெரிவித்துள்ள எலான் மஸ்க், ‘எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளோம். அரசு ஒப்புதல் அளித்ததும் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி கொண்டு வரப்படும்’ என தெரிவித்தார்.
அதிகரிக்கும் செயலிகள்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகளால் மக்களிடையே ஆன்லைன் பண பரிமாற்றம் தொடர்பான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கிகளின் செயலிகள் மட்டுமல்லாது கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் பண பரிமாற்றம் செய்ய பயன்பாட்டில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியானது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் எக்ஸ் வலைத்தளம் மூலமாக இந்த வசதி கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.