Twitter India | ட்விட்டர் இடைக்கால அதிகாரி ராஜினாமா? - மீண்டும் சிக்கலில் ட்விட்டர்!
இந்த புதிய விவகாரம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என சந்தேகிக்கப்படுகிறது
மாற்றியமைக்கப்பட்ட தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில், அண்மையில் ட்விட்டர் தனது இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியை நியமித்திருந்தது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் , ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் சில தொழில்நுட்ப மாற்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தது மத்திய அரசு. குறிப்பாக சமூக வலைத்தள நிறுவனங்கள் , தங்கள் அலுவலகத்தில் மூன்று அரசு அதிகாரிகளை(முதல் நிலையில் பதிப்பாளர், இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் இந்திய அரசின் மேற்பார்வைக்குழு) நியமிக்க வேண்டும், தவறான கருத்துகளை யார் முதலில் பரப்புகிறாரோ அந்த பயனாளரின் விவரங்களை நிறுவனங்கள் வெளிப்படையாக வெளியிட வேண்டும், ட்விட்டர் போன்ற வலைத்தளத்தில் ஒருவரின் கணக்குகளை நீக்குவதற்கு முன்னதாக அது குறித்த காரணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அவை கடந்த மே மாதம் நடைமுறைக்கு வந்தது.
இதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் குறைத்தீர்க்கும் அதிகாரி ஒருவரை சமூக வலைத்தள நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்திருந்தது. மற்ற நிறுவனங்கள் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ட்விட்டர் மட்டும் இந்த புதிய விதிகள் பயனாளர்களின் கருத்து சுதந்திரத்திரத்திற்கு எதிரானது என மௌனம் சாதித்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியில் நீதிமன்றத்தையும் நாடியது ட்விட்டர். ஆனால் அந்த முயற்சி பாதகமாக அமைந்துவிடவே விரைவில் அரசு அதிகாரிகளை நியமிப்பதாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்தவொரு முன்னெடுப்புகளையும் ட்விட்டர் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அரசு, ட்விட்டரின் “ இண்டர் மீடியேட்டர் ” ஸ்டேட்டஸை பறித்துவிட்டது. அதாவது ட்விட்டரில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு ட்விட்டரே பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் அது. தொடர்ந்து மத்திய அரசுக்கும் , ட்விட்டருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. பலக்கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கான இடைக்கால மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி தர்மேந்திர சதுர் என்பவரை பதவியில் நியமித்தது. ஆனால் பதவியேற்று ஒரு புகாரைக்கூட கையாளாத நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது விளக்கப்படவில்லை என்றாலும், இது ட்விட்டர் நிறுவனத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் தர்மேந்திர சதுர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்த அதிகாரபூர்வ காரணங்களை விரைவில் ட்விட்டர் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . முன்னதாக புதிய தொழில்நுட்ப விவகாரத்தில் அழுத்தம் கொடுத்த மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கணக்கினை ட்விட்டர் விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி தற்காலிகமாக முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.