நாம் தினசரி வாழ்க்கையில் மொபைல் போனை பிரிக்க முடியாத அளவுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சில பொதுவான பழக்கங்கள், தெரியாமல் நம் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தலையணையின் கீழ் போன் வைத்து தூங்குவது ஆபத்து
இரவில் பலர் தலையணையின் கீழ் அல்லது அருகில் மொபைலை வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். குறிப்பாக சார்ஜில் இருக்கும் போது, போன் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் அதிகம். எந்தவொரு விபத்தையும் தவிர்க்க, தூங்கும் போது மொபைலை குறைந்தது 2-3 அடி தூரத்தில் வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குளியலறையில் மொபைல் பயன்படுத்தும் பழக்கம்
இப்போது குளியலறையிலும் போன் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் கழிப்பறையை கழுவிய பிறகு, அதிலிருந்து வெளியேறும் நுண்ணிய துகள்கள் காற்றில் பரவி குளியலறையின் அனைத்து மேற்பரப்பிலும் படியும். இந்த துகள்களில் பாக்டீரியா, வைரஸ் இருக்கும் வாய்ப்பு அதிகம். அவை போனில் ஒட்டிக் கொண்டு, பின்னர் கைகள் வழியாக உடலுக்குள் நுழைந்து நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே குளியலறைக்குச் செல்லும் முன் போனை வெளியே வைப்பது சிறந்தது.
பாக்கெட்டில் போன் வைத்திருப்பதும் அபாயம்
பலர் சட்டைப் பாக்கெட்டில் போன் வைத்திருப்பதை தவிர்க்கிறார்கள், ஏனெனில் அது இதயத்திற்கு அருகில் இருக்கும். ஆனால் பேண்ட் பாக்கெட்டும் பாதுகாப்பானது அல்ல. ஆராய்ச்சிகளின் படி, பேண்ட் பாக்கெட்டில் போன் வைத்திருப்பதால் வெளிப்படும் கதிர்வீச்சு, பர்ஸ் அல்லது பையில் வைத்திருப்பதை விட 2 முதல் 7 மடங்கு அதிகம். தொடர்ந்து இத்தகைய கதிர்வீச்சுக்கு ஆளாவதால் கட்டி உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம்.
காரின் டேஷ்போர்டில் போன் வைக்க வேண்டாம்
நேரடி சூரிய ஒளி ஸ்மார்ட்போனை விரைவாக வெப்பமடையச் செய்யும். காரின் டேஷ்போர்டில் நீண்ட நேரம் வைக்கப்படும் போன், பேட்டரி மற்றும் உள்ளமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது சாதனத்தின் ஆயுளைக் குறைக்கும்.
இரவில் சார்ஜில் விட்டு தூங்குவது ஆபத்து
பலர் இரவில் போனை சார்ஜில் வைத்து தூங்கச் செல்கிறார்கள். இது அதிக சார்ஜ் ஆகி, வெப்பமடைந்து, வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அதனால் இரவில் சார்ஜ் வைப்பதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் சார்ஜ் செய்வது அவசியம்.
நிபுணர்கள் கூறுவது, போனைப் பயன்படுத்தும் முறைகளை சிறிது மாற்றினால், ஆரோக்கியமும், பாதுகாப்பும் காக்கப்படும் என்பதே. "போனை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்" என்ற பழக்கம், சில சமயம் நம்மை ஆபத்திற்குள் தள்ளும் என்பதால், எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.