Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
Boeing Starliner Return : போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது விண்வெளி வீரர்கள் இல்லாமல் தனியாக பூமி திரும்பியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக , விண்வெளி வீரர்களுடன் பூமி திரும்புவதில் சிக்கலில் சிக்கிய ஸ்டார்லைனர் விண்கலமானது, தனியாக பூமி திரும்பியது. பூமியில் தரையிறங்கிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்:
கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இவர்களது காலமானது 8 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிர முயற்சித்தது.
சிக்கலில் வீரர்கள்:
இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தின் சிக்கல்கள் முழுமையாக சரிசெய்யப்படாத காரணத்தால், விண்வெளி வீரர்களை அழைத்து வருவதில் நாசா மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
தனியாக வந்திறங்கிய விண்கலம்:
இதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலமானது விண்வெளி வீரர்கள் இல்லாமல் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இந்த விண்கலமானது, இன்று அதிகாலை வெற்றிகரமாக தரையிறங்கியது. அந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலமானது விண்வெளி வீரர்களுடன் திரும்பி முழு வெற்றியை பெறாவிட்டாலும், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்து வந்து, அடுத்தகட்ட வெற்றியை அடைந்துள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக விண்வெளி வீரர்களுடன் பயணத்தை, அடுத்து எப்போது தொடங்குவது குறித்து நாசாவுடன் விரிவாக ஆலோசனைக்கு பிறகே தெரியவரும்.
Touchdown, #Starliner! The uncrewed spacecraft landed at New Mexico's White Sands Space Harbor at 12:01 am ET (0401 UTC) on Saturday, Sept. 7. pic.twitter.com/Q5lITEzATn
— NASA (@NASA) September 7, 2024