இனிமே சிம் கார்ட் இல்லை.. e-SIM தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐஃபோன்.. அறிமுகப்படுத்தும் Apple..
ஆப்பிள் நிறுவனம் சார்பில் அடுத்து வெளியாகும் ஐஃபோன் மாடலில் சிம் இல்லாமல் இயங்கும் வசதி இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இது ஐஃபோன் 15 சீரிஸ் மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சார்பில் அடுத்து வெளியாகும் ஐஃபோன் மாடலில் சிம் இல்லாமல் இயங்கும் வசதி இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இது ஐஃபோன் 15 சீரிஸ் மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐஃபோன் 13 மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஐஃபோன் 15 சீரிஸ் மாடல், 2023ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், நேரடியான சிம் கார்ட் ஸ்லாட் இல்லாமல் இயங்கும் முதல் ஐஃபோன் மாடலாக ஐஃபோன் 15 சீரிஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் சில நபர்களால் வெளியிடப்பட்டிருப்பதால், இவற்றின் உண்மைத் தன்மை குறித்து சரிபார்க்கப்படவில்லை.
தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, `ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாக சிம் கார்ட் இல்லாமல், e-SIM தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காகப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐஃபோன் தயாரிப்புகளை மேற்கொள்ளும் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் ஐஃபோன் மாடல்களின் pro வெர்சன் வெளியிடப்படும் எனவும், இதில் நாம் தற்போது பயன்படுத்தும் சிம் கார்ட் செலுத்தும் வசதி எதுவும் இடம்பெறாமல், 2 e-SIM ஸ்லாட்களால் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஐஃபோன், ஐபேட் ஆகிய தொழில்நுட்ப கேட்ஜெட்கள் கடந்த சில ஆண்டுகளாக eSIM தொழில்நுட்பத்தை நோக்கி தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. மேலும், ஐஃபோன் 13, ஐஃபோன் 13 ப்ரோ ஆகிய இரு மாடல்களும் இரண்டு eSIMகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் முதல் ஐஃபோன் மாடல்கள் எனப் பாராட்டுகளைப் பெற்றன’ எனக் கூறப்பட்டுள்ளது.
சிம் இல்லாத ஐஃபோன் வெளியிடுவதையும், அதனை ஐஃபோன் 15 மாடலில் அறிமுகப்படுத்துவதையும் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தால், இந்த மாடலான ஐஃபோன் 15 சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வெளியாகாமல் போகலாம். ஏனெனில் பல்வேறு நாடுகளில் eSIMகளுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தும் தொழில்நுட்ப சாத்தியங்கள் குறைவு என்பதால் இவ்வாறான சிக்கல் இதில் இருக்கிறது. மேலும், எந்த வயரும் இல்லாமல் ஐஃபோன் மாடலை வெளியிடவும் ஆப்பிள் நிறுவனம் முயன்று வருகிறது. சார்ஜர் வயர் இல்லாமல் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கம்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிடவுள்ள ஐஃபோன் 15 சீரிஸ் மாடலுடன் Type-C சார்ஜரை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பெரும்பாலான அனைத்து மாடல்களின் நிறுவனங்களும் இந்த வகை சார்ஜரை அறிமுகப்படுத்தியிருப்பதோடு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடலில் இது வெளியிடப்பட்டது. ஆப்பிள் ஐஃபோன் 14 அடுத்த ஆண்டு வெளியாகும் நிலையில், அதில் Type-C சார்ஜர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.