டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா புஜாரா? காரணம் என்ன?
நம்பர் 3 இடத்தில் களமிறங்கும் புஜாராவிற்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் விராட் கோலி அல்லது கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தச் சூழலில் வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பெரிய அளவிற்கு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நம்பர் 3 இடத்தில் களமிறங்கும் புஜாராவிற்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் விராட் கோலி அல்லது கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்தச் சூழலில் புஜாராவின் சமீபத்திய ரெக்கார்டு என்ன? அவரை ராகுல் டிராவிட் உடன் ஒப்பிடுவது சரியா?
புஜாராவின் சமீபத்திய ரெகார்டு:
இந்திய டெஸ்ட் அணியில் 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் புஜாரா முதல் முறையாக களமிறங்கினார். அப்போது முதல் தற்போது வரை இவர் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6267 ரன்களை அடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் புஜாராவின் பேட்டிங் செயல்பாடுகள் மிகவும் சுமாராக தான் இருந்துள்ளது. குறிப்பாக 2020 ஜனவரி முதல் அவருடைய பேட்டிங் சராசரி மிகவும் குறைந்துள்ளது. 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை புஜாராவின் பேட்டிங் சராசரி 26.35 ஆக உள்ளது. அத்துடன் அவருடைய ரன் விகிதமும் 30.20ஆக குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு வரை புஜாராவின் பேட்டிங் சராசரி 49.48 மற்றும் ரன் எடுக்கும் விகிதம் 46.69 ஆக இருந்தது.
அந்த நிலை தற்போது குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இவர் அதிகமான பந்துகள் ஆடுவதிலேயே கவனமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது எழுந்துள்ளது. இவருடைய ரன் விகிதம் திடீரென இந்த அளவிற்கு குறையா இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின்பு 30 இன்னிங்ஸில் விளையாடியுள்ள புஜாரா ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம்.
டெஸ்ட் | 2020க்கு முன்பு | 2020க்கு பின் |
இன்னிங்ஸ் | 124 | 20 |
ரன்கள் | 5740 | 527 |
சராசரி | 49.48 | 26.35 |
ரன் விகிதம் | 46.69 | 30.2 |
சதம் | 18 | 0 |
அரைசதம் | 24 | 5 |
அத்துடன் 2019ல் அடித்த கடைசி சதத்திற்கு பிறகு 9 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். 2020-ஆம் ஆண்டிற்கு முன்பாக 124 இன்னிங்ஸில் 5740 ரன்கள் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 20 இன்னிங்ஸில் 527 ரன்களை அடித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது 2020ஆம் ஆண்டிற்கு பிறகு இவருடைய ஃபார்ம் எவ்வளவு மோசமாக அமைந்துள்ளது என்று தெரிகிறது. அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் புஜாரா 18 போட்டிகளில் விளையாடி 841 ரன்களை 28.03 என்ற சராசரியில் அடித்துள்ளார். இந்த 18 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 81 ரன்களை அடித்துள்ளார்.
MS Dhoni Viral: விவரம் தெரியாம பேசாதீங்கப்பா.. - தோனி ட்ரோலுக்கு பதிலளித்த ரெசார்ட்!
புஜாரா vs திராவிட் ஒப்பீடு:
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் திராவிட். 2012ஆம் ஆண்டு ராகுல் திராவிட் ஓய்விற்கு அவரின் இடத்தை புஜாரா நிரப்புவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இருவரும் அதிக நேரம் பேட்டிங் செய்ய கூடிய திறமை கொண்டவர்கள் என்று கருதப்பட்டது. இதன் காரணமாக புஜாராவை எப்போதும் திராவிட் உடன் ஒப்பீட்டு பலரும் பேசி வந்தனர். ஆனால் புஜாராவைவிட திராவிட் பல விஷயங்களில் முன்னிலையில் உள்ளார். ராகுல் திராவிட்டைவிட புஜாரா டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்விகிதம் வைத்திருந்தாலும் அவருடைய ஆட்டம் திராவிட்டைவிட சற்று குறைவு தான். ஏனென்றால் திராவிட் 50 ரன்கள் அடித்ததற்கு பிறகு அவருடைய ரன் விகிதம் கணிசமாக உயரும். இதற்கு சான்று அவருடைய 2011 இங்கிலாந்து தொடரில் ட்ரென்ட் பிரிட்ஜ் போட்டியில் 131பந்துகளில் 50 அடித்திருந்த திராவிட் 209 பந்துகளில் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஓவல் மைதானத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 93 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த திராவிட் 168 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
ரன் விகிதம் விஷயத்தில் புஜாரா மிகவும் மெதுவாகவே ரன்களை அடித்துள்ளார். உதாரணத்திற்கு 2020-21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் புஜாராவின் அடித்த ரன்கள் 43(160), 17(70), 50(176),77(205), 25(94),56(211) என மிகவும் மெதுவாக ரன்களை அடித்துள்ளார். ராகுல் திராவிட் ஷார்ட் பீட்ச் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள ஹூக் மற்றும் புல் ஷாட்களை வைத்திருந்தார். அது அவருக்கு வெளிநாடு ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள நன்றாக கைக் கொடுத்தது. ஆனால் புஜாரா பவுன்சர் மற்றும் ஷார்ட் பீட்ச் பந்துகளை எதிர்கொள்ள சற்று சிரம பட்டு வருகிறார்.
இதன் காரணமாக வெளிநாடுகளில் திராவிட்டின் பேட்டிங் சராசரி 53.03 ஆக உள்ளது. புஜாராவின் சராசரி 39.32 ஆக குறைந்துள்ளது. அத்துடன் ராகுல் திராவிட் வெளிநாட்டு போட்டிகளில் ஒவ்வொரு 7 இன்னிங்ஸிற்கு ஒரு முறை சதம் அடித்துள்ளார். ஆனால் புஜாரா ஒவ்வொரு 9 இன்னிங்ஸிற்கு ஒரு முறை சதம் கடந்துள்ளார். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது திராவிட் மற்றும் புஜாரா இருவருக்கும் இடையே நிறையே வேறுபாடுகள் உள்ளன. புஜாராவின் பேட்டிங் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சற்று சிறப்பாக இருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
மேலும் படிக்க:தொடரும் டெயில்-எண்ட்டர்ஸ் பேட்டிங் சொதப்பல்.. சுதாரிக்குமா இந்தியா அணி?