WTC 2021 Final: 3 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - யார் உள்ளே, யார் வெளியே ?
பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்டுல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகிய 6 பந்துவீச்சாளர்கள் யார் மூவர் இறுதி போட்டியில் களம் இறங்குவார்கள்!
இந்தியா vs நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வரும் ஜூன் 18-ஆம் தேதி மோதுகின்றன. இங்கிலாந்து அணியுடனான தொடரில் வெற்றிபெற்று விட்டு தெம்பாக இறுதி போட்டிக்குள் நுழைகிறது நியூசிலாந்து அணி. ஏறக்குறைய நியூசிலாந்து அணியின் பிளேயிங் 11-இல் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் இந்திய அணியோ நேரடியாக இறுதி போட்டிக்குள் களமிறங்குகிறது, யாரு இந்திய அணியில் சில இடங்களை நிரப்பப்போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து கூட்டணி - யாரு உள்ளே, யார் வெளியே ?
20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் வேகப்பந்துவீச்சில் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகிய 6 பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் நிலவும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலால், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதி போட்டியில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1) ஜஸ்பிரீத் பும்ராஹ்
குறைந்த காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக இந்தியாவின் மூன்று விதமான போட்டிகளிலும் உருவெடுத்தவர் பும்ராஹ். வெறும் 19 டெஸ்ட் போட்டிகள் தான் இவர் விளையாடியுள்ளார், ஆனால் அதற்குள்ளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பும்ராஹ் மாறிவிட்டார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ராஹ், 50 விக்கெட்களை வேகமாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். மேலும் 5 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பும்ராஹ் நிச்சயமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2) முகமது ஷமி
புது பந்துகளை ஸ்விங் செய்வது, பழைய பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி கில்லாடி. கடைசி 4 வருடங்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரரும் பந்துவீச்சாளரும் ஷமி தான், 2017-ஆம் ஆண்டில் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ஷமி 38 டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 180 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் முன்னனி பந்துவீச்சாளராக வளம் வருகிறார். அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முகமது ஷமி நிச்சயம் களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை.
3) முகமது சிராஜ் vs இஷாந்த் சர்மா
3-வது வேகப்பந்துவீச்சாளராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் யார் களமிறங்குவார்கள் என்பதே தற்போது பலரின் எதிர்பார்ப்பு. சிலர் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா களமிறக்கப்பட வேண்டும் என்கின்றனர், சிலர் அண்மையில் சிறப்பாக செயல்பட்ட சிராஜுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். முகமது சிராஜ் அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் தான் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார், ஆனால் 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் சிராஜ். அதே நேரம் இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக பல வருடங்களாக விளையாடி வருகிறார், 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் 303 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதனால் முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மாவை களமிறக்க வேண்டும் என்ன இந்தியாவின் முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமணன், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சிராஜை களமிறக்கவேண்டும் என ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணி இங்கிலாந்து செல்லும் முன்பு விராட் கோஹ்லி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் பேசும் ஒரு காணொளி லீக் ஆனது, அதில் முகமது சிராஜை வைத்து துவங்க வேண்டும் என விராட் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இஷாந்த் சர்மாவிற்கு பதில், முகமது சிராஜ் களமிறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியில் ஜஸ்பிரீத் பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.