Devendra Jhajharia Profile: ‘மின்சாரம் தாக்கி கை இழந்தவர்...’ இன்று வெள்ளி பதக்கத்தை ஏந்துகிறார்! 40 வயதில் சாதித்த ஜஜாரியா!
மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்ட ஜஜாரியாவின் இடது கை முழுவதும் துண்டிக்க வேண்டிய சூழல் உருவாகியது. வேறு வழியின்றி மருத்துவர்கள் அவருடைய கையை முற்றிலும் துண்டித்தனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், குர்ஜார் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால், ஒரே நாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க பர்ஃபாமென்சை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே, பாராலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ள ஜஜாரியா, இம்முறை வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். பாராலிம்பிக்கில் மூன்று பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற சாதனைக்கும் இப்போது சொந்தக்காரர். உத்வேகம் தரும் ஜஜாரியாவின் சாதனை பயணம் இதுவே!
கை இழப்பு:
ராஜஸ்தான் மாநிலம் சூரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர ஜஜாரியா. இவர் தன்னுடைய சிறுவயதில் அங்கு இருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது தன்னுடைய 8ஆவது வயதில் ஒருநாள் மரம் ஏறும் போது அருகே இருந்த மின்சார கம்பியின் மீது இவருடைய கைப் பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்டுள்ளார். மேலும் அவருடைய இடது கை முழுவதும் துண்டிக்க வேண்டிய சூழல் உருவாகியது. வேறு வழியின்றி மருத்துவர்கள் அவருடைய கையை முற்றிலும் துண்டித்தனர்.
ஒரு கை போனது என்று சோர்ந்து முடங்கி இருக்காமல் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பக்க பழமாக இருந்தவர் இவருடைய தந்தை தான். தனது தந்தையின் அறிவுரையின் பெயரில் விளையாட்டை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஈட்டி ஏறிதல் விளையாட்டை தன்னுடைய ஒரு கையை வைத்து பயிற்சி செய்ய தொடங்கினார்.
முதல் பாராலிம்பிக் பதக்கம்:
2002ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி வென்றார். இதன் காரணமாக 2004ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அதில் எஃப்-46 பிரிவு ஈட்டி எறிதலில் பங்கேற்றார். ஏற்கெனவே அந்த சமயத்தில் இருந்த 59.77 மீட்டர் என்ற தூரத்தை தாண்டி 62.15 மீட்டர் வீசி உலக சாதனை படைத்தார். அத்துடன் தன்னுடைய முதல் பாராலிம்பிக் தங்கத்தை வென்றார். உலக சாதனையுடன் பாராலிம்பிக் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதன்பின்னர் 2008 மற்றும் 2012 ஆகிய பாராலிம்பிக் தொடர்களில் எஃப்-46 பிரிவு இடம்பெறவில்லை. இதன் காரணாம ஜஜாரியாவால் அந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமால் பயிற்சி செய்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கம் வென்று அசத்தினார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது தங்கம்:
பாராலிம்பிக் பதக்க கனவை துரத்தி கொண்டிருந்த இவருக்கு 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் நல்ல செய்தியை தந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எஃப்-46 பிரிவு ஈட்டி எறிதல் பாராலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது. இந்த முறையும் ஜஜாரியா தகுதி பெற்றார். இரண்டாவது முறையாக தன்னுடைய உலக சாதனையை முறியடித்து மீண்டும் பாராலிம்பிக் தங்கம் வென்றார். அந்த முறை 63.97 மீட்டர் தூரம் வீசி முந்தைய சாதனையான 62.15 மீட்டரை கடந்து அசத்தினார். இதன்மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். இவரது சாதனையை பாராட்டி 2017ஆம் ஆண்டு மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்தது. விளையாட்டு துறையில் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை வென்ற முதல் பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
தந்தையின் இழப்பு மற்றும் டோக்கியோ தகுதி:
#Paralympics #Praise4Para
— DD News (@DDNewslive) August 30, 2021
All that hard work and then - India's beautiful national flag! 🇮🇳@DevJhajharia and Sundar Gurjar get the country silver and bronze medals respectively in the Men's Javelin Throw F46 Final pic.twitter.com/tD8dPLoncr
2018ஆம் ஆண்டு இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகும் என்ற சிக்கல் எழுந்தது. அப்போதும் இவருக்கு பக்க பழமாக இவருடைய தந்தை இருந்துள்ளார். இவருக்கு மீண்டும் ஊக்கம் அளித்து விளையாட்டை தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 40 வயதை கடந்த போதும் விடாமல் டோக்கியோ பாராலிம்பிக் தொடரை குறி வைத்து செயல்பட்டார். இந்தச் சூழலில் கடந்த மாதம் இவருக்கு பெரிய இடியாக அமைந்தது அவருடைய தந்தையின் மரணம். உடல்நல குறைவு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக இவருடைய தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த மாதம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரழந்துள்ளார். உடல்நலம் சரியில்லாத போதும் அவருடைய தந்தை இவரை பயிற்சிக்கும் செல்லுமாறே கூறியுள்ளார். தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மூன்றாவது முறையாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார். இம்முறை தகுதி பெறும் போதே தன்னுடைய பழைய சாதனையான 63.97 மீட்டரை கடந்து 65.71 மீட்டர் வீசியுள்ளார். இப்போது டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று மறைந்த தன்னுடைய தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார் அவர்.