300 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: நீதிமன்றத்தில் அழுத வீராங்கனைகள்!
”நான் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை விவரிக்க இங்கு வந்திருக்கிறேன். இது நான் சந்தித்ததிலேயே மிகவும் கொடுமையான தருணம்.”
உலகின் நம்பர் ஒன் ஜிம்னாஸ்டிக் வீராங்கணையாக திகழ்ந்து வருபவர் அமெரிக்காவை சேர்ந்த சிமோன் பைல்ஸ். 24 வயதாகும் சிமோன் பைல்ஸ் அமெரிக்காவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தையும், உலக ஜிம்நாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். இதை தவிர இன்னும் பல தொடர்களில் அமெரிக்காவுக்காக பதக்கங்களை வாரிக் குவித்தவர் சிமோன் பைல்ஸ்.
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், திடீரென தனது மன ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதாகக் கூறி விலகினார். இவரது முடிவு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இவர் கடந்த 2015 ஆம் அமெரிக்க மகளிர் ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்த லேரி நஸ்ஸார் மீது #MeToo ஹேஷ்டேக் இயக்கத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அவருடன் மற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளான அலி ரைஸ்மேன் மற்றும் மெக்கெய்லா மரோனி ஆகியோரும் லாரி நஸ்ஸார் மீது பாலியல் துன்புறுத்தல் அளித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இவர்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 300 வீராங்கனைகள் லேரி நஸ்ஸார் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகாரளித்தனர்.
இது தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு கடந்த 2017-இல் சிறையில் அடைக்கப்பட்டார் லேரி நஸ்ஸார். அப்போது அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் மீது அடுத்தடுத்து வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இதில் ஒரு நீதிமன்ற அவருக்கு 175 ஆண்கள் சிறை தண்டனை விதித்தது. மற்றொரு நீதிமன்றம் 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
இந்த நிலையில், லேரி நஸ்ஸார் மீதான புகார்களை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி நிர்வாகம் மற்றும் அமெரிக்காவின் காவல்துறையான FBI முறையாக விசாரிக்காமல் புகாரளித்த தங்களுக்கு எதிராக செயல்பட்டதாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் FBI-இன் அனுகுமுறை மீதான புகார்களை அமெரிக்காவின் செனட் நீதிவிசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் லேரி மீது புகாரளித்த, ஜிம்னாஸ்டிக் வீராங்கணைகள் நேரில் ஆஜராகி தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கண்கலங்க பேசினர்.
சிமோன் பைல்ஸ் பேசுகையில், ”மருத்துவர் லேரியால், 300-க்கும் அதிகமான வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர் மீது நாங்கள் அளித்த புகார்கள் மீது, அமெரிக்க காவல் துறை மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லேரி நஸ்ஸாருக்கு எதிரான ஆதாரங்களை மூடி மறைத்தனர். எதையும் கண்டுகொள்ளாமல் குருடர்களை போல் நடந்துகொண்டனர். நான் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை விவரிக்க இங்கு வந்திருக்கிறேன். இது நான் சந்தித்ததிலேயே மிகவும் கொடுமையான தருணம். நான் லேரி நஸ்ஸாரையும் இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் குற்றம்சாட்டுகிறேன்.” எனப்பேசிய அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரது பேச்சை கேட்டு அருகில் இருந்த மற்ற வீராங்கனைகளும் கண்கலங்கினர். லேரி நஸ்ஸாருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக் சம்மேளன நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.