Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் பதிலடி! ரசிகர்கள் அதிர்ச்சி, அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
இந்த சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை நினைத்து வருந்துகிறோம். ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உண்மையுடன் மன்னிப்பு கோருகிறோம்.

தமிழ் தலைவாஸ் அணியில் ஆரம்பத்திலிருந்தே, அணித் தேர்வு, பயிற்சி, வியூகம் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளிலும் தலைமைப் பயிற்சியாளருக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
புரோ கபடி சீசனில் லீக் சுற்றோடு தமிழ் தலைவாஸ் அணி வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள், விளையாடிய 18 போட்டிகளில் 12-ல் தோல்விகளைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ் அணி.
அணியில் ஆண்டுதோறும் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்று நிர்வாகம் மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், போட்டியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன், பயிற்சியாளர் இருவருமே செய்தியாளர்களைச் சந்தித்து நிர்வாகத்தின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
இந்த நிலையில் இதற்கு தமிழ் தலைவாஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளர் வெளியிட்ட, "கிளப் மேலாண்மையின் தலையீடு காரணமாக விளையாட்டு முடிவுகள் பாதிக்கப்பட்டன" என்ற கருத்துக்களை முன்னிட்டு, தமிழ் தலைவாஸ் கீழ்க்கண்ட உண்மைகளை தெளிவுபடுத்துகிறது.
ஆரம்பத்திலிருந்தே, அணித் தேர்வு, பயிற்சி, வியூகம் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளிலும் தலைமைப் பயிற்சியாளருக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டது.
அனைத்து ஆதரவும் கொடுத்தோம்
ஒப்பந்தப்படுவதற்கு முன்பே, அணியின் அமைப்பு, NYP & RYP வீரர்கள், மேலும் இளம் வீரர்களை மேம்படுத்தும் கிளப்பின் நீண்டகால தத்துவம் ஆகியவை முழுமையாக விளக்கப்பட்டன. ஏலம் மற்றும் சீசன் முழுவதிலும் பயிற்சியாளர் கேட்ட அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டன.
எந்த நிலையிலும் மேலாண்மை அல்லது பகுப்பாய்வாளர்கள் விளையாட்டு முடிவுகளில் தலையீடு செய்ததாக கூறுவது முற்றிலும் உண்மையற்றது.
தமிழ் தலைவாஸ், தலைமைப் பயிற்சியாளர் என்பது அணியின் செயல்திறன், ஒற்றுமை மற்றும் மனப்பாங்கை உயர்த்தும் மிகப் பெரிய பொறுப்புடைய பதவி என்று நம்புகிறது.
பயிற்சிக் குழுவிடம் இருந்து போதிய வழிகாட்டல் இல்லை
இருப்பினும், சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், அணியின் மொத்த முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, பயிற்சியில் மற்றும் போட்டிகளின் போது பயிற்சியாளர் குழுவிலிருந்து தேவையான வழிகாட்டல் மற்றும் கவனம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் பல வீரர்களிடமிருந்து கிடைக்க பெற்றன. இவை வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப, பயிற்சியாளரிடம் தெரிவிக்கப்பட்டு, அமைதியாக சரி செய்யப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், சீசனில் போட்டிக்குப் பிந்தைய 16 பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தவறவிட்ட பயிற்சியாளர். இறுதிப் போட்டியில் ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவித்தது ஏமாற்றமளிக்கிறது. இது வருந்தத்தக்க முடிவு.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
இந்த சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை நினைத்து வருந்துகிறோம். ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உண்மையுடன் மன்னிப்பு கோருகிறோம்.
அடுத்த சீசனுக்கான வலிமையான திட்டமிடல் மற்றும் மதிப்பீடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நாங்கள் மீண்டும் வலுவாக மீண்டு வந்து எங்கள் ரசிகர்களுக்கு பெருமையையும் நிகழ்ச்சிகளையும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்’’.
இவ்வாறு தமிழ் தலைவாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






















