ஆறுதல் வெற்றியோடு தொடரை இழந்தது இலங்கை!
இலங்கை அணியின் கேப்டன் குஷால் பெரெரா பொறுப்புடன் ஆடி சதம் அடித்தார். 97 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை, ஆறுதல் வெற்றியை பெற்று தொடரை இழந்தது.
![ஆறுதல் வெற்றியோடு தொடரை இழந்தது இலங்கை! Sri Lanka won by 97 runs against bangladesh ஆறுதல் வெற்றியோடு தொடரை இழந்தது இலங்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/4c7361410aa20b57465edfb4e722ce32_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டாக்காவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதன் முதல் போட்டி, டாக்காவில் உள்ள ஷேர் பங்களா மைதானாத்தில் கடந்த 23ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் டக்வொர்த் லுயிஸ் விதிப்படி இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், அதே மைதனாத்தில் நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் பெரேரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் குஷால் பெரெரா பொறுப்புடன் சதம் அடித்து 120 ரன்களில் ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி சில்வா 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குணதிலகா 39 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷோரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. கடந்த ஆட்டத்தில் வங்கதேச பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியது போல, இந்தப் போட்டியில், இலங்கை பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இதனால், வங்கதேச அணி 42.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மஹமதுல்லா 53 ரன்களும் , மொசாடெக் ஹூசைன் 51 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சரியாக விளையாடததால், இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாகும். இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
5 விக்கெட்டுகள் வீழ்த்திய துஷ்மந்தா சமீராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முஷ்பிகுர் ரஹிம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2- 1 என கைப்பற்றியதை தொடர்ந்து, அந்த அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் பலமான இலங்கை அணியை வீழ்த்திய வங்கதேச அணிக்கு சமூக வலைதளங்களில் அந்நாட்டு ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் நடந்த கிரிக்கெட் போட்டி என்பதால் உலகளாவிய ரசிகர்களும் இத்தொடரை ஆர்வமுடன் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)