ஐபிஎல் 3-வது லீக் போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 14-வது ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், பெங்களூர் அணி வெற்றிபெற்றது. மும்பையில் நடைபெற்ற சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி வெற்றிபெற்றது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹைதராபாத் அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், சாகா, மனீஷ் பாண்டே, வில்லியம்சன் உள்ளிட்டோரும், பவுலிங்கில் நடராஜன், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சந்திப் சர்மா உள்ளிட்டோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இதேபோல், கொல்கத்தா அணியிலும் சுப்மன் கில், ரானா, மோர்கன், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் முதல் போட்டியிலேயே அணிக்கு ரன்களை குவிக்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக ஆண்ட்ரு ரசல், சகிப் ஹல் ஷசன் உள்ளனர். கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங், வருண் சக்ரவர்த்தி பவுலிங்கின் எதிரணி வீரர்களை மிரட்டுவார்கள் என தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில், இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் விளையாடுவார்கள். இதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது. ஐபிஎல் தொடரில், இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்திருக்கிறது.