Sachin on Copa America: அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து...பிரேசிலுக்கு ஆறுதல் கூறிய சச்சின்...!
இறுதிப் போட்டியில் தோற்றால் ஏற்படும் வலி புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் இது சாலையின் ஒரு வளைவு, சாலையின் முடிவு அல்ல.
கோபா அமெரிக்க கால்பந்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கும் வாழ்த்துகளும், தோல்வியடைந்த பிரேசில் அணிக்கு ஆறுதலையும் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.
அமெரிக்காவில் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் என்றால் அது கோபா அமெரிக்க கால்பந்து தொடர்தான். இந்தாண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகள் மோதின. அமெரிக்க கண்டத்தின் இரு பெரும் கால்பந்து அணிகள் மோதியதால் இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அத்துடன் மெஸ்ஸி மற்றும் நெய்மார் என இரண்டு நட்சத்திர வீரர்களும் ஒரே போட்டியில் களமிறங்கியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் 22ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் எஞ்சல் டி மரியா, ரோட்ரிகோ கடத்தி தந்த பந்தை கோலாக மாற்றினார். இதன் காரணமாக அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் முதல் பாதியில் இரு அணிகள் வீரர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதேபோல் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயற்சி செய்தனர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடங்கள் எஞ்சி இருந்த போது மெஸ்ஸிக்கு அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் அதை கோலாக மாற்ற மெஸ்ஸி தவறினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அர்ஜெண்டினாவின் வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், கோபா அமெரிக்க கால்பந்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கும் வாழ்த்துகளும், தோல்வியடைந்த பிரேசில் அணிக்கு ஆறுதலையும் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.
தனது முதல் ட்விட்டில், ‘கோபா அமெரிக்கா கால்பந்தில் வரலாற்று வெற்றி பெற்ற அர்ஜென்டினாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இது அனைத்து அர்ஜெண்டினாவிற்கும் ஒரு வரலாற்று வெற்றியாகும். நட்சத்திர வீரர் மெஸ்ஸி தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டிருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Heartiest congratulations to @Argentina on winning the #CopaAmericaFINAL.
— Sachin Tendulkar (@sachin_rt) July 11, 2021
It is a historic win for all the Argentinians, and is an icing on the cake for Messi who has had such a stellar career. Continue inspiring. pic.twitter.com/5oaxHf1A1N
அடுத்த ட்விட்டில், இறுதிப் போட்டியில் தோற்றால் ஏற்படும் வலி புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் இது சாலையின் ஒரு வளைவு, சாலையின் முடிவு அல்ல. பிரேசில் அணி, மீண்டும் வலுவாக மீண்டெழுவார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
The pain of losing a final is understandable. But this is just a bend in the road, not end of the road for @neymarjr & @CBF_Futebol.
— Sachin Tendulkar (@sachin_rt) July 11, 2021
They’ll bounce back stronger and do themselves proud. pic.twitter.com/K6B8tLT4WP
முன்னதாக, அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது மனைவி அன்டோனெல்லா ரோக்குஸோவை செல்போனில் வீடியோ கால் மூலம் அழைத்து கோப்பையை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பெருமையுடன் தனது பதக்கத்தை அவருக்கு காண்பித்தார்.