IPL 2026: தொடங்கப்போகும் ஐபிஎல் திருவிழா! கோப்பைக்காக ஏங்கும் 3 அணிகள்! இந்த முறையாவது கனவு பலிக்குமா?
ஐபிஎல் வரலாற்றில் பல அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள போதிலும், சில அணிகள் இன்னும் தங்களது முதல் வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) அடுத்த சீசன் மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் பல அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள போதிலும், சில அணிகள் இன்னும் தங்களது முதல் வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அதிக முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணிகளாகத் திகழ்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டும் இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.
பஞ்சாப் கிங்ஸ்
முன்னர் 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' என்று அழைக்கப்பட்ட இந்த அணி, 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. ப்ரீத்தி ஜிந்தாவிற்குச் சொந்தமான இந்த அணி, 2014-இல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கொல்கத்தாவிடம் தோற்றது. அதேபோல், 2025-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் இந்த அணி, வரவிருக்கும் சீசனில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்
முன்னர் 'டெல்லி டேர்டெவில்ஸ்' என்று அறியப்பட்ட இந்த அணி, JSW ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜிஎம்ஆர் குழுமத்திற்குச் சொந்தமானது. வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் விளையாடியுள்ளனர். 2020-ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி, மும்பை இந்தியன்ஸிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான RPSG குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணி, 2022-இல் ஐபிஎல் தொடரில் இணைந்தது. முதலில் கே.எல். ராகுல் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டாலும், கோப்பையை வெல்ல முடியவில்லை. பின்னர் 2025-இல் ரிஷப் பண்ட் வசம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றும், இறுதிப் போட்டிக்குச் செல்லத் தவறியது. தற்போது பண்ட் தலைமையில் தனது முதல் கோப்பையை வென்று வரலாறு படைக்க லக்னோ அணி தயாராகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















