WTC final: ரிஷப் பந்தே இந்தியாவின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் - ரித்திமான் சாஹா ஓபன் டாக்!
ஆஸ்திரேலிய தொடரில் 274 ரன்கள், இங்கிலாந்து அணியுடனான தொடரில் 270 ரன்கள் விளாசிய - ரிஷப் பந்த்!
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த். ஆனால் இது இன்றைய நிலையே, சிறிது காலம் முன்பாக 2020ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய அணி மேற்கொள்வதற்கு முன்பு, இந்திய அணியில் ரிஷப் பந்த் vs ரித்திமான் சாஹா என்ற ஒரு விவாதம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் அதனை தனது அதிரடியால் மாற்றி எழுதினார் ரிஷப் பந்த், 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இவரின் துணிவான ஆட்டத்தை கண்ட சர்வதேச கிரிக்கெட் அணிகள் மிரண்டன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இந்திய அணி, அடிலைட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களில் சுருண்டு படுதோல்வியடைந்தது. அதில் ரித்திமான் சஹா முதல் இன்னிங்ஸில் 9 ரன்னும், 2வது இன்னிங்ஸில் 4 ரன்னும் எடுத்தார். அவ்ளோதான் 2வது டெஸ்ட் போட்டிக்கு அணியின் பிளேயிங் 11 உள்ளே என்டர் ஆனார் ரிஷப் பந்த் . 3 போட்டிகளில் 274 ரன்களை விளாசினார் பந்த். குறிப்பாக பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ரிஷப் பந்த் அடித்த 89 ரன்களை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. காப்பா மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரிலும் 270 ரன்களை விளாசினார் ரிஷப் பந்த்.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தே களமிறங்குவார் என இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு விக்கெட் கீப்பரான ரித்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சாஹா "ரிஷப் பந்த் இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார், அதனால் அவரே இந்திய அணியின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார். நான் அணியுடன் தொடர்ந்து பயிற்ச்சி செய்துகொண்டே, தேவை ஏற்பட்டால் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்க காத்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "நான் ரன்கள் ஸ்கோர் செய்யும் போதும், செய்யாத நிலையிலும் எப்போதும் போன்றே இருக்க விரும்புகிறேன். என்னுடைய ஆட்டத்தில் மாற்றம் எதையும் செய்ய விரும்பவில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்கு தெரியாது, ஆனால் சிறப்பாக விளையாடவே விரும்புகிறோம். சில நேரங்களில் அது நடக்கும், சில நேரங்களில் நடக்காது" ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்று மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ளனர்.