Murali Karthik Interview: பவுலருக்கு மட்டும் ஏன் நோ பால்? - மீண்டும் "மான்கேட்" விவகாரத்தை கையிலெடுத்த அஸ்வின்!
"மின்னாடியே வெளில போய் அவுட் ஆனா -5 ரன், -10 ரன் குடுத்துருங்க" - "அவுங்களுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி சட்னியா"
இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ டியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறை நட்சத்திரங்களுடன் உரையாடும் காணொளிகளை பதிவு செய்து வருகிறார். அதில் நேற்றைய தினம் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட மற்றொரு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான முரளி கார்த்திக்குடன் உரையாடியுள்ளார்.
அதில் சர்ச்சையை ஏற்படுத்திய பழைய விவகாரம் ஒன்றை மீண்டும் கையிலெடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அது தான் "மான்கேட்" நிகழ்வு.
2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொது பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை மான்கேட் முறையில் ஆட்டமிழக்க செய்தார். அதாவது ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, எதிர்முனையில் உள்ள மற்றொரு பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே தனது கிரீஸில் இருந்து வெளியேறி ரன்களை சேர்க்க முயற்சி செய்யும் பட்சத்தில், பந்துவீச்சாளர் பந்தை வீசாமல் ரன் அவுட் செய்வதே மான்கேட் என சொல்லப் படுகிறது. கிரிக்கெட் விதிகளின் படி அவ்வாறு பந்து வீசும் முன்னரே பேட்ஸ்மேன் வெளியேறும் சமயங்களில் அவுட் செய்யலாம், அது விக்கெட்டாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் அஸ்வின் செய்த செயல் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டிற்கு' எதிராக இருப்பதாக பலர் குரல்கள் எழுப்பினர்.
தற்போது மீண்டும் மான்கேட் செய்வது சரியா தவறா ? மீண்டும் முரளி கார்த்திக்குடன் விவாதித்துள்ளார் அஸ்வின்.
2019ம் ஆண்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான விஷயம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் அஸ்வின். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற சூழல், மும்பை வீரர்கள் அல்சாரி ஜோசப், ராகுல் சஹார் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருக்குகிறார்கள். அப்போது பஞ்சாப் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புட் இறுதி பந்தை வீசுவதற்கு முன்பாக, அவரை அழைத்த அஸ்வின், பந்துவீசும் முன்பே பேட்ஸ்மேன் கிரீஸில் இருந்து வெளியேறி ரன்களை சேர்க்க முயற்சித்தால் மான்கேட் முறையில் அவுட் செய்யுமாறு தெரிவித்துள்ளார். அனால் அவ்வாறு செய்தால் எல்லாரும் என்னை வில்லனாக சித்தரிப்பார்கள் என்று அங்கித் ராஜ்புட் செய்யாமல் தவிர்த்துவிட்டார். அதனால் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் தொடரிலிருந்து வெளியேறியது என அஸ்வின் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அஸ்வினுடன் பேசிய முரளி கார்த்திக் "நான் 11 பேரையும் அப்டி அவுட் ஆக்குவேன், தேவையில்லாமல் ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட்னு சொல்லி, பவுலரை வில்லன் ஆக்கிடுறாங்க" என் அதை ஆதரித்துள்ளார்.
மேலும் தொடர்ந்துள்ள அஸ்வின் "நோ பால் போட்டா மட்டும் ஃபிரீ ஹிட் குடுக்குறீங்க, பால் போடுறது முன்னாடி பேட்ஸ்மேன் வெளியே போவது மட்டும் நோ பால் இல்லையா ? பேட்ஸ்மேன் வெளில போனா ரன் மைனஸ் பண்ணிடுங்க" என்றும் தெரிவித்துள்ளார்.
இதை சரி என ஆதரித்து பேசிய முரளி கார்த்திக் "ஃபாஸ்ட் பவுலர் பாவம், கஷ்டப்பட்டு வேகமா ஓடி வந்து போடுறான், லைட்டா கால் வெளியில போய்ட்டு அப்டின்னா நோ பால், ஆனால் பேட்ஸ்மேன் கிரீஸ் வெளியில போய் நின்னுகிட்டு என்ன ஏன் அவுட் பண்ணின அப்டினு கேக்குறாங்க. எந்த புத்தகத்தில் எழுதியுள்ளது இந்த ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
சில சமயங்களில் பேட்ஸ்மேன் கிரீஸ் வெளியே செல்லும் பொது பவுலர் வார்னிங் கொடுப்பது உண்டு, அது குறித்து பேசிய அஸ்வின் "எதுக்கு வார்னிங் கொடுக்கணும் ? கால் வெளில போறப்ப வார்ன் பண்ணிட்டா நோ பால் கொடுக்குறாங்க ? அவுங்களுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்த தக்காளி சட்னியா" என்கிறார்.
இதனை தடுக்க புதிய யோசனையாக "முன்னாடியே வெளில போய் அவுட் ஆனா -5 ரன், -10 ரன் குடுத்துருங்க, அப்டி கொடுத்தா எப்படி விளையாடுராங்க பார்க்கலாம்" என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இப்படி இந்தியாவின் இரு சுழல்களும் மான்கேட் முறை குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நிலையில், மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா இந்த விவகாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.