Chappell on Dravid: ஆஸ்திரேலிய பார்முலாவை டிராவிட் காப்பி அடித்துள்ளார் : கொளுத்திப் போட்ட கிரெக் சாப்பல்
பல முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகிய நிலையிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது - கிரெக் சேப்பல்
கிரெக் சேப்பலுக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள கிரெக் சேப்பல், கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை முன்பு செய்ததை தற்போது இந்தியா செய்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக "வீரர்களின் திறமையை கண்டறியும் நடைமுறை ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருகாலத்தில் திறமையான இளம் வீரர்களை கண்டறிவதில் சிறப்பாக இருந்த ஆஸ்திரேலியா இன்று அதில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுமே ஆஸ்திரேலியாவை விட இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதற்குப் பின்னால் உள்ள ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் மூளையை எடுத்துக் கொண்ட ராகுல் டிராவிட் இங்கு ஆஸ்திரேலியா செய்ததை அப்படியே இந்தியாவில் செய்கிறார்" என்று தெரிவித்துள்ளார்...
ராகுல் டிராவிட்டை கிரெக் சேப்பல் புகழ காரணமுண்டு. பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக தற்போது ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். மேலும் 19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கும், இந்தியா ஏ அணிக்கும் 2016 முதல் 2019ம் ஆண்டு வரை ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் இருந்தார். ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, சுப்மன் கில் என, இன்று சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள் பலர் ராகுல் ட்ராவிடின் வளர்ப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவை பார்த்து டிராவிட் இதனை செய்வதாக சேப்பல் சொல்வதில் தான் சிக்கல்.
மேலும் வழக்கமாக மற்ற அணிகளை காலை வாரும் சேப்பல், இந்த முறை ஆஸ்திரேலியாவின் காலையே வாரியுள்ளார். "கடைசி இரண்டு ஆண்டுகளாக திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அணிக்கு அழைத்து வருவதில் ஆஸ்திரேலியா சரியாக செயல்படவில்லை, கட்டமைப்பில் மாற்றம் தேவைப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டுள்ள சாப்பல், இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். "விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற பல முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகிய நிலையிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. புது முக வீரர்கள் பலர் போட்டியில் புதிதாக களமிறங்கியபோதும், இந்தியா ஏ அணிக்கு விளையாடிய அனுபவம் அவர்களை சர்வதேச வீரர்களை போல் செயல்பட வைத்தது. அதே நேரம் முழு பலத்தோடு இருந்த ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது" என்று கூறினார் சேப்பல்.
சேப்பெலுக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் எப்போதுமே ஏக பொருத்தம், இவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இருந்தபோது தான் கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்து கீழ் இறக்கப்பட்டார், மேலும் 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்று போட்டிகளிலேயே வெளியேறியது. அதனை தொடர்ந்து ராகுல் டிராவிடும் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகினார். இதுபோன்று சர்ச்சைகளுக்கு பெயர் போன சேப்பல், தற்போது ஆஸ்திரேலியா செய்ததை இங்கே செய்து இந்தியா வளர்வதாக மேலும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தற்போது பொறுப்பு வகிக்கும் சவுரவ் கங்குலி என்ன சொல்வாரோ?