Novak Djokovic:யுஎஸ் கிராண்ட்ஸ்லாம்.. ஆஸ்திரேலியா வீரரிடம் தோல்வி அடைந்த ஜோகோவிச்! அவரே சொன்ன காரணம்
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தங்கம் வென்றதன் விளைவுதான் இது என்று நோவக் ஜோகோவிச் கூறியுள்ளார்.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்:
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஷெர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தோல்வியை சந்தித்துள்ளார். 25வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வெல்லும் கனவுடன் ஜோகோவிச் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கி இருந்தார். ஆனால் 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சை பாப்பிரினை எதிர்கொண்ட ஜோகோவிச் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளார்.
நான்கு முறை சாம்பியனான 37 வயதான ஜோகோவிச், மூன்றாவது சுற்றில் 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 28வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்தவகையில், 2017 க்குப் பிறகு முதல் முறையாக அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இல்லாமல் இந்த சீசனில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
நோவக் ஜோகோவிச் தோல்வி:
இச்சூழலில் தோல்வி குறித்து ஜோகோவிச் பேசியிருக்கிறார். அதில்,"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தங்கம் வென்றதன் விளைவுதான் இது. பாரீஸ் ஒலிம்பிக்கிற்காக நான் எனது ஆற்றலை முழுமையாக செலவு செய்து விட்டேன். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியில்லாமல் தான் நியூயார்க்கிற்கு வந்தேன். ஆனால் இது யுஎஸ் ஓபன் என்பதால் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். எனக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை." என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாப்பிரின் டென்னிஸ் பயணத்தில் முதல்முறையாக டாப் வீரர் ஒருவரை வீழ்த்தி யுஎஸ் ஓபன் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் முதல்முறையாக நுழைந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் பலரும் பாப்பிரினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதேபோல்,மெத்வதேவ், கேஸ்பர் ரூட், ஸ்வெரவ் உள்ளிட்டோரும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.