ரஷீத்கான் - முஜிபுர் ரஹ்மான் : எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?
ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று ஸ்பின்னர்களுடன் ஆடி வருகிறது. ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான், கேப்டன் முகமது நபி மூவருமே அபாயகரமான பௌலர்களே.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இந்திய அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும். ஆனால், அது நிச்சயமாக எளிதான டாஸ்க்காக இருப்பதில்லை. ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்பின்னர்கள் இந்திய அணியை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் பெரும்பலமே அவர்களின் பௌலிங்தான். அதுவும், குறிப்பாக ஸ்பின்னர்களே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கின்றனர். ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று ஸ்பின்னர்களுடன் ஆடி வருகிறது. ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான், கேப்டன் முகமது நபி மூவருமே அபாயகரமான பௌலர்களே.
ரஷீத்கான் ஐ.பி.எல் போட்டிகளில் அதிகம் பந்துவீசி பார்த்திருப்போம். ஐ.பி.எல் போட்டிகளுக்கு அறிமுகமானதிலிருந்து இன்று வரை அவர் அப்படியே அதே அபாயகரத்தன்மையுடனே இருக்கிறார். இன்றைக்கும் ரஷீத் கானின் கூக்ளிக்களை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஐ.பி.எல் போட்டிகளிலேயே அவ்வளவு வெறித்தனமாக வீசுகிறவர் தன் சொந்த நாடு என்று வரும்போது சொல்லவா வேண்டும்? ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் தனது வேகமான கூக்ளிக்கள் மூலம் விக்கெட் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி ரேட் 4.7 மட்டுமே. ஒவ்வொரு 8.8 பந்துகளுக்கும் ஒவ்வொரு 7 ரன்களுக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.
முஜிபுர் ரஹ்மான். ஆஃப் ஸ்பின்னர் என வகைப்படுத்தப்பட்டவர். ஆனால், பந்தை இரண்டு பக்கமும் திருப்பும் திறன் படைத்தவர். இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின்னராக விரல்களை பயன்படுத்தி ஆஃப் ஸ்பின் வீசும் முஜிப், வலக்கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின்னர் போல மணிக்கட்டை பயன்படுத்தி கூக்ளியை வீசுகிறார். இப்படி இரண்டு முரணான ஸ்டைல்களை ஒரே ஸ்பெல்லில் வீசுவதான் முஜிபுர் ரஹ்மானின் தனித்துவம். இதனால் இடக்கை பேட்ஸ்மேன் வலக்கை பேட்ஸ்மேன் என்ற வேறுபாடே இவருக்கு தேவையில்லை. இரண்டு விதமான பேட்ஸ்மேன்களுக்கும் நேர்த்தியாக இவரால் வீச முடியும். இந்த உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 4.25 மட்டுமே. ஸ்காட்லாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பலமான பாகிஸ்தானுக்கு எதிராக பவர்ப்ளே அட்டகாசமாக வீசியிருந்தார். மொத்தமாக அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.
இவர்கள் இருவரும் போக கேப்டன் முகமது நபி, இந்த உலகக்கோப்பையில் சுமாராக வீசினாலும் அவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளரே. பௌலிங்கில் இந்த முறை கொஞ்சம் சறுக்கினாலும் பேட்டிங்கில் ரன் சேர்த்து கொடுக்கிறார்.
இந்த மூவரையும் குறிப்பாக ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான் என இருவரையும் சமாளிப்பதே இந்தியாவிற்கு பெரிய டாஸ்க்காக இருக்கும். இந்திய அணி ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் 16 ஓவர்களை சந்தித்திருக்கின்றனர். 3 விக்கெட்டுகளை விட்டிருக்கின்றனர். விக்கெட்டுகளை விட ரன்ரேட் ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. 4.7 என்ற அளவில்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்கோர் செய்திருக்கின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், கேப்டன் கோலி இருவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறவே செய்கின்றனர். ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்களின் சமீபத்திய ரெக்கார்ட் மோசமாகவே இருக்கிறது. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த பேட்ஸ்மேன்களில் இவர்கள் இருவருமே இடம்பெற்றிருந்தனர்.
ஆக, இந்திய அணி வீரர்கள் இன்றைக்கு ஆஃப்கன் அணியின் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இந்திய அணியின் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்படும்.
ஒரே ஒரு நல்ல செய்தியாக இந்த போட்டியில் முஜிபுர் ரஹ்மான் ஆடுவாரா என்பது இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்திருந்த முஜிப் கடந்த போட்டியில் நமீபியாவிற்கு எதிராக ஆடவில்லை. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆடுவாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.