Watch Video: "காணக் கண்கோடி வேண்டும்.." - உலகக்கோப்பையை குழந்தையைப்போல கையில் ஏந்திய மெஸ்ஸி..!
உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸி கையில் ஏந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தாரில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. லூசையில் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
போட்டிக்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம் உள்பட 120 நிமிடங்களிலும் இரு அணிகளும் 3-3 என்ற சமநிலையில் இருந்தது. இதனால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக முதல் கோலை விளாச, மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். அடுத்த 2 வாய்ப்புகளையும் அர்ஜெண்டினா கோலாக்க பிரான்ஸ் கோட்டைவிட்டது. நான்காவது வாய்ப்பில் மீண்டும் பிரான்ஸ் கோல் அடிக்க, அர்ஜெண்டினா அணியின் இளம் வீரர் மோண்டியல் நான்காவது வாய்ப்பையும் கோலாக்க அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மாண்டியேல் கோல் அடித்து மூன்றாவது உலகக்கோப்பை அர்ஜெண்டினா அணிக்கு உறுதி செய்ததும், மெஸ்ஸி மைதானத்திலே உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார். ஒட்டுமொத்த அர்ஜெண்டினா அணியும் மெஸ்ஸியை ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை வென்று தந்த மெஸ்ஸிக்கு போட்டியை நடத்திய கத்தார் அணி தங்களது நாட்டு பாரம்பரியப்படி ஷேக்குகளுக்கான ஆடையை அணிவித்து அவரது கைகளில் உலகக்கோப்பையை வழங்கினர். உலகக்கோப்பையை பெற்றுக்கொண்ட மெஸ்ஸி ஒரு குழந்தையை தூக்கிச் செல்வது போல, அந்த கோப்பையை மெல்ல மெல்ல தூக்கிச்சென்று தனது அணியினருடன் ஒன்றாக நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், தங்கப்பந்து விருதை வென்ற பிறகு பரிசளிப்பு மேடையில் இருந்து கீழே இறங்கிய மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு ஒரு குழந்தைக்கு கொடுப்பது போன்று முத்தம் கொடுத்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: FIFA WORLDCUP 2022: இறுதிவரை திக்..திக்..! பெனால்டி ஷூட் அவுட்டில் மிரட்டல்...! சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா..!
மேலும் படிக்க: Golden Boot: தோற்றாலும் வீரன் வீரனே.. கோல்டன் பூட் விருதை வென்றார் பிரான்ஸின் 'தங்கமகன்' எம்பாப்பே..!