Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் முன்பு உற்சாகமாக விஜய் ஓடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், அவருடைய கடைசி படமான ஜனநாயகன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உற்சாகமாக ஓடிய விஜய்:
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால் விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
ரசிகர்களுக்கு இருக்கைகளும், ரசிகர்கள் முன்பு விஜய் ரேம்ப் வாக் செல்வதற்காக ஒரு தனி மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் அரைகிலோ மீட்டர் வேகத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த மேடையில் விஜய் உற்சாகமாக நடந்து சென்றார். தனது ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்துச் சென்ற விஜய், பின்னர் மீண்டும் நிகழ்ச்சி மேடைக்கு திரும்பும்போது உற்சாகமாக ஓடி வந்தார்.
மலேஷியாவில் நடைப்பெறும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யுடன் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர்!#ThalapathyVijay #JanaNayagan#JanaNayaganAudioLaunch pic.twitter.com/XoSZXm2sj7
— Touring Talkies (@ToouringTalkies) December 27, 2025
ரசிகர்கள், பிரபலங்கள் உற்சாகம்:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, விஜய்யின் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மலேசிய அரசு விதித்துள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் திரை பிரபலங்கள் நாசர், அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் தாய் ஷோபா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
படத்தின் இயக்குனர் எச்.வினோத், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக மிகப்பெரிய இசை கச்சேரியும் நடத்தப்பட்டது. விஜய்யின் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
பொங்கல் ரிலீஸ்:
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் வீடியோக்களை விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.
தெலுங்கில் பாலையா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இந்த படம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் குடும்ப கதையாக மகள் - வளர்ப்பு தந்தை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த அந்த படத்தை, விஜய்யின் அரசியல் வருகைக்காக சில மாற்றங்களுடன் எச்.வினோத் இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற படக்குழுவும், ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.





















