Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
இந்த வழக்கில், திருமணம் முடிந்த மறுநாளே தம்பதியினர் தனித்தனியாக வாழத் தொடங்கியதால், இந்த விவகாரம் விரைவாக தீர்க்கப்பட்டது என வழக்கறிஞர் சோனாவேன் கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் 24 மணி நேரத்திற்கு விவாகரத்திற்கு விண்ணப்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த தம்பதியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திருமணம் என்பது ஒரு சொல்லில் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான உறவு முறையாகும். நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் என தினம், தினம் நம்மைச் சுற்றி ஏராளமான நிகழ்வுகளைக் கண்டிருப்போம். எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் அன்பு, சண்டை, பிரிவு என எல்லாம் இருக்கும். சில நேரங்களில் இவை சுமூகமான முடிவுக்கு வரும். சில நேரங்களில் விவாகரத்து வரை செல்லலாம். ஆனால் தம்பதிகள் இடையே புரிதல் என்ற ஒன்று உண்டாக சில காலம் எடுக்கும்.
இப்படியான நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த 2 ஆண்டு காலமாக ஒரு ஜோடி காதலித்து வந்துள்ளனர். இதில் அந்தப் பெண் தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருப்பவர். அதே சமயம் ஆண் ஒரு பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்கு இரண்டு ஒருவரையொருவரை நன்கு அறிந்திருக்கிறோம். வாழ்க்கை நன்றாக செல்லும் என மணம் முடிக்கலாம் என்ற முடிவை எடுத்தனர்.
இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு கணவர் தனது மனைவியிடம் தான் இப்போது ஒரு கப்பலில் வேலை செய்து வருகிறேன். இதற்காக எப்போது, எங்கு பணியமர்த்தப்படுவேன் அல்லது எவ்வளவு காலம் வெளியூரில் இருப்பேன் என தெரியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது அதிருப்தியை வெளிப்படுத்த இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிச்சயமற்ற வாழ்க்கை ஏற்பாட்டை தேர்வு செய்துள்ளதை இருவரும் உணர்ந்தனர். இதற்கு பிரிந்து செல்வதுதான் சிறந்த வழி என ஒருமனதாக முடிவு செய்தனர். அதன்படி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய இந்த விவாகரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர் சோனாவேன், திருமணத்திற்கு முன்பு இருவரும் கடந்த இரண்டு வருட உறவில் இருந்துள்ளனர். ஆனாலும் திருமணத்திற்கு பிறகான இவ்வளவு முக்கியமான பிரச்சினையான வாழ்க்கைச் சூழல் பற்றி விவாதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என குறிப்பிட்டார்.
இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் பெரும்பாலும் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கில், திருமணம் முடிந்த மறுநாளே தம்பதியினர் தனித்தனியாக வாழத் தொடங்கியதால், இந்த விவகாரம் விரைவாக தீர்க்கப்பட்டது எனவும், அவர் கூறினார். இவ்வழக்கில் வன்முறை அல்லது குற்றவியல் தவறு செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதால் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.





















