GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
பாமக கௌரவ தலைவரும் ராமதாஸ் ஆதரவாளருமான ஜிகே மணியை கட்சியில் இருந்து நீக்கி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பூசல் வெடித்து வரும் நிலையில் தற்போது உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. ராமதாஸும் அன்புமனியும் மாறி மாறி ஒருவரையொருவர் சாடி வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளரும் பென்னாகரம் தொகுதி எம் எல் ஏவுமான ஜிகே மணியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
அப்பா மகன் இடையேயான மோதலில் கட்சி யாருக்கு என்ற போர் வெடித்தது. இதில் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் பாமக தலைவர் என அவர் பக்கம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ராமதாஸ் சார்பில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி தேர்தல் ஆணையத்தில் அன்புமணி போலி ஆவணங்களை சமர்பித்து கட்சியை தன்பக்கம் கொண்டுபோய் விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்/
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜிகே அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். குறிப்பாக தந்தை மகனை பிரித்ததாக தன்மீது அன்புமனி குற்றம் சாட்டுவதாகவும், கட்சியை விட்டும் எம் எல் ஏ பதவியை விட்டும் விலகத் தயார் எனவும் பகீர் ஸ்டேட்மெண்ட் விட்டார்.
இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார் பாமக தலைவர் அன்புமணி.,அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.





















