Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: திமுக வாஜ்பாயி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்ததை மறந்துவிட்டதாக, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Nainar Nagendran: ”எடப்பாடி பழனிசாமி எனும் நான்” என இபிஎஸ் பதிவியேற்கும் காலம் வரும் என, நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
திமுக மீது நயினார் அட்டாக்:
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், திண்ண்டுக்கல்லில் நேற்று அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “திண்டுக்கல் மாவட்டம் பூட்டுக்கு புகழ்பெற்ற ஊர். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த திமுக ஆட்சிக்கும் மக்களாகிய நீங்கள் பூட்டுப் போட வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் போடப்பட்ட சாலைகளைத் தவிர திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஊர்களுக்கு சாலைகள் இல்லை. ஆனால் முதலமைச்சரைக் கேட்டால் பொற்கால ஆட்சி என்று சொல்லுவார்.
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு:
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர்களின் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்துள்ளனர். ஆத்தூரைச் சுற்றியுள்ள ஆறுகளில் உள்ள மணல் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. 70 அடி ஆழத்திற்கு செம்மண் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஊழலில் திளைத்துப் போயுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 170 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அதில் 70 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போதே மது அருந்தி விட்டு வருகிறார்கள். தலைமையாசிரியர்கள் மாணவர்களை கால் அமுக்கிவிடப் பணிக்கின்றனர். பக்தியே இல்லாதவர்கள் பழனியில் முருகபக்தர்கள் மாநாட்டை நடத்தினார்கள். மாநாடு முடிந்தவுடன் அனைவரும் டாஸ்மாக் கடைக்குப் போனார்கள். மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருகர் மாநாட்டில் கலந்து கொண்ட ஐந்து லட்சம் பேரும் உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினர்.
கூட்டணி வலுவடையும்..
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே ஆட்சி தொடருமானால் இந்த நாடு தாங்காது. மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். திமுக தனது கூட்டணி வலிமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால பொங்கலுக்கப் பிறகு என்.டி.ஏ கூட்டணி வலிமையாகி விடும். ஆட்சியைப் பிடிக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 4000 பேருக்கு மாதம் ஆறாயிரம் வீதம் 363 கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 45 ஆயிரம் பேருக்கு 76 கோடி ரூபாய் மதிப்பில் பயிர்க்காப்பீடும் 64 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸும் வழங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 72 பேருக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 பேருக்கு மோடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 40 மலிவு விலை மருந்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
”திமுக மறந்துவிட்டது”
1999 ஆம் ஆண்டு வாஜ்பாயைச் சந்தித்து கூட்டணி வைத்த திமுகவினர் அதிமுகவின் கூட்டணி குறித்து விமர்சனம் செய்யலாமா? பாஜகவோடு 5 ஆண்டுகள் இணைந்து 8 மத்திய அமைச்சர்களைப் பெற்று அனுபவித்தனர். அதை இன்று மறந்து விட்டனர். தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, கவர்னர் மாளிகையில் "எடப்பாடி பழனிசாமி எனும் நான்" என அண்ணன் இபிஎஸ் கம்பீரமாகச் சொல்லி பதவியேற்கும் காலம் வரும். அவரோடு சேர்ந்து பதவியேற்க வேண்டிய காலகட்டத்தை பழனி முருகன் நமக்கு அருள்வார்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.





















