கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. தொடரை வெல்லுமா இந்திய அணி?
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளதால், தொடரில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக புனேயில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட், D20 தொடரை தொடர்ந்து இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் விளையாடுவார்கள்.
இரண்டு தொடர்களையும் இழந்ததால், ஒருநாள் தொடரையாவது வென்று நாடு திரும்பவேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளனர். இதனால், இன்றைய ஆட்டத்தில், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.
கடந்த போட்டியில், இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்தும், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. அதனால், இன்றைய போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.