Indias Grandmaster: 19 வயதில் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன கௌஸ்தவ் சட்டர்ஜி..! யார் இவர்?
கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார்.
மைதானத்தில் ஓடி, ஆடி வியர்வை சிந்தி விளையாடும் ஆட்டத்தை காட்டிலும், ஒரே இடத்தில் அமர்ந்து மூளையை பயன்படுத்தி விளையாடும் செஸ் மற்ற போட்டிகளை காட்டிலும் சற்றே கடினமானது தான். ஒவ்வொரு செஸ் வீரருக்கும் கனவு என்பது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனபது தான். ஆனால், கிராண்ட் மாஸ்டர் ஆக உருவாவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எப்படி?
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2,500 புள்ளிகளை கடந்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு, தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் வழங்கப்படும். அந்த வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 77 பேர் கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளனர்.
கௌஸ்தவ் சாட்டர்ஜி:
அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தவ் சட்டர்ஜி, இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார். 59-வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மித்ரபாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி டிரா செய்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய கடைசி தகுதிநிலையை அவர் எட்டினார். மேற்கு வங்காளத்தில் இருந்து உருவெடுத்த 10-வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் கௌஸ்தவ் சாட்டர்ஜி பெற்றுள்ளார்.
19-year-old Koustav Chatterjee becomes India's 78th Grandmaster
— ChessBase India (@ChessbaseIndia) January 1, 2023
Kolkata and West Bengal got its 10th Grandmaster in the form of Koustav on the last day of 2022 at MPL 59th National Senior Chess Championship
➡️https://t.co/IKvYGrKp5C
Congratulations to Koustav and his family🎉👏 pic.twitter.com/bR5pP7VqD4
கிராண்ட் மாஸ்டர் ஆனது எப்படி?
முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடந்த கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான தகுதிநிலையை கௌஸ்தவ் பெற்றார். தொடர்ந்து கடந்த நவம்பர் முதல் வாரத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது தகுதி நிலையை பெற்றார். இந்நிலையில், தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் 10 சுற்றுகளுக்குப் பிறகு 8 புள்ளிகளுடன் முன்னில்லை பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான மூன்றாவது தகுதி நிலையையும் அவர் பெற்றார். இதனிடையே , கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச செஸ் சம்மேளனத்தில் புள்ளி பட்டியலில், கௌஸ்தவ் 2500 புள்ளிகளை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 1988ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் ஆக பட்டம் வென்றார். அவரை தொடர்ந்து, இந்தியாவின் 77வது கிராண்ட் மாஸ்டர் ஆக, தமிழகத்தை சேர்ந்த பிரனவ் கடந்த ஆண்டு பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.