Kapildev To Neeraj Chopra | 'எப்போ கல்யாணம்'? கேட்ட கபில்தேவ்.. வெட்கப்பட்டு பதிலளித்த ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா..!
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனக்கு திருமணம் எப்போது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வெள்ளிப்பதக்கத்துடன் மட்டுமே வெளியேறிவிடும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழாவிற்கு முந்தைய நாளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தொலைவு தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு சாதனை படைத்தார்.
இந்தியாவின் தடகள வரலாற்றிலே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை ஆகும். தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏபிபி நியூஸ் செய்தி நிறுவனம், தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் ஒரு சிறப்பு நேர்காணல் நடத்தியது. நீரஜ் சோப்ராவிடம் இந்த நேர்காணலை இந்தியாவிற்காக முதல் உலககோப்பையை வென்றவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமாகிய கபில்தேவ் நடத்தினார்.
அப்போது, கபில்தேவ் நீரஜ்சோப்ராவிடம், "எதிர்காலத்தில் திருமணம் குறித்த திட்டம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்த கேள்வியை எதிர்பார்க்காத நீரஜ் சோப்ரா சில நொடிகள் வெட்கப்பட்டார். பின்னர், வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன் எனது முழு கவனமும் ஈட்டி எறிதலில் மட்டுமே உள்ளது என்றார். மேலும், திருமணம் செய்துகொள்வதில் உள்ள அழுத்தம் பற்றி கூறுங்கள் என்று நீரஜ் சோப்ராவிடம் கபில்தேவ் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, "இல்லை. எனது முழு கவனமும் விளையாட்டில் மட்டுமே உள்ளது. தற்போது, எனது முழு கவனத்தையும் விளையாட்டிலே செலுத்த விரும்புகிறேன்.” என்றார்.
இந்தியாவிற்காக தடகளத்தில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவும், இந்தியாவிற்காக கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக உலககோப்பையை வென்று தந்த கபில்தேவும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா சிறுவயதில் மிகவும் குண்டாக இருந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினரிடம் அவரது உடலை ஆரோக்கியமாக மாற்றுவதற்காக தடகளப் பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர். தான் ஈட்டி எறியும் போட்டியில் ஒரு சாம்பியனாக வருவேன் என்று ஒருமுறை கூட நினைத்து பார்த்ததேயில்லை என்று நீரஜ் சோப்ராவே கூறியுள்ளார்.
மைதானத்திற்கு சென்றபோது விளையாட்டு என்பது எனது திட்டத்தின் ஒரு பகுதியாக கூட இருந்ததில்லை. நாட்டிற்காக விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்ற திட்டமும் இல்லை. எனது குடும்பத்தில் இருந்தும், எனது ஊரில் இருந்தும் விளையாட்டில் யாருமே இல்லை. இதையடுத்து, நான் மிகவும் கடுமையாக உழைத்து ஒவ்வொருவரின் ஆதரவையும் பெற்றேன் என்று ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.