IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம்: ரூ. 2 கோடி அடிப்படை விலை லிஸ்ட்டில் இடம்பெறாத இந்திய வீரர்கள்..!
ஐபிஎல் மினி ஏலத்தின் அடிப்படை விலை 2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை.
ஐபிஎல் மினி ஏலம்:
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16-வது சீசனுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் 2023 மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதன் மூலம் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியின் பலவீனங்களை சரி செய்ய தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். குறிப்பாக அதிரடியான ஆல்-ரவுண்டர்களை எடுக்கவே அனைத்து அணி நிர்வாகங்களும் போட்டி போட உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களில் ஏலத்தில் பங்கேற்க, முன்பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பதிவு செய்த வீரர்களின் பட்டியல்:
இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இதுவரை 991 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 10 அணி நிர்வாகங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த மினி ஏலத்தில் பங்கேற்க, 714 இந்தியர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவே முதலிடத்தில் உள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் இருந்து 57 வீரர்கள், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 52 வீரர்கள், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 33 வீரர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 31 வீரர்கள், ஐபிஎல் மினி ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதனிடையே, இந்திய அணிக்காக விளையாடியுள்ள 19 வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில், பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, 1.50 கோடி, 1 கோடி, 75 லட்சம், 50 லட்சம் என பட்டியல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன்படி, இந்த மினித்தில் ரூ.2 கோடி அடிப்படையில் விலையில் 21 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்திய வீரர் ஒருவர் கூட இந்திய பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 1.50 கோடி பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ரூ 1 கோடி அடிப்படை விலையில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2 கோடி அடிப்படை விலை: நாதன் கூல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கேன் வில்லியம்சன் ரிலீ ரோசோவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்
1.5 கோடி அடிப்படை விலை: சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷாகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
1 கோடி அடிப்படை விலை: மயங்க் அகர்வால், கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில், கைல் ஜேமிசன், டாம் ஹென்ராம் , டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், டேவிட் வைஸ்
சென்னை அணி விடுவித்த வீரர்கள்:
முன்னதாக, மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக அனைத்து அணி நிர்வாகங்களும், தங்கள் ஒப்பந்தத்திலிருந்து பல முன்னணி வீரர்களை விடுவித்தன. அதன்படி, சென்னை அணி டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோரை விடுவித்தது. சென்னை அணியால் விடுவிக்கப்பட்ட பிராவோ மினி ஏலத்தில் பங்கு பெற தனது பெயரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி விடுவித்த வீரர்கள்:
மும்பை அணி, கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் ஆகிய வீரர்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துகொண்டது.