ஐபிஎல் 12ஆவது லீக் போட்டி: சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நடப்பு தொடரில், இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியுற்றது. அதன்பிறகு, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. இதனால், இவ்விரு அணிகளும் முழு தெம்புடன் களத்தில் இன்று களம் காணும். கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை துவம்சம் செய்தது. ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டியது. ஆனால், கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. அதனால், அவர் இன்று அணியில் இருந்து கழற்றிவிட வாய்ப்புள்ளது. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா தொடக்க ஆட்டக்காரராக இறங்கலாம். பாப் டூ பிளிசஸ் மற்றும் மொயின் அலி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ரெய்னா, அம்பத்தி ராயுடு மீது ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதால், அவர்கள் ரன்களை குவிக்கும் பட்சத்தில் அதிக ஸ்கோர்களை சென்னை அணி எட்டலாம். நடப்பு தொடரில், தோனி இன்னும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், இவரும் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பவுலிங்கில் சாஹர் கடந்த போட்டியில் மிரட்டியதால், அவர் மீது இன்றைய போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். சாம் கரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர், பிராவோ ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் சென்னைக்கு இன்று வெற்றி உறுதி கூறிவிடலாம்.
ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் விலகினாலும், அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் களமிறங்கிய டேவிட் மில்லர் 43 பந்துகளில் 62 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். பட்லர், சஞ்சு சாம்சன் தொடக்கத்திலேயே ரன்களை குவிக்க தொடங்கினால் அணிக்கு நல்லதாக அமையும். ரியான் பராக், ஷிவம் துபே ஆகியோர் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கிற்கு ஜய்தேவ் உனத்கட், முஸ்தாபிகர் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ்,சேட்டன் சக்கரியா ஆகியோர் உள்ளனர்.
வெற்றியை தொடர வேண்டும் என இரண்டு அணிகளும் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.