Suresh Raina: பிறந்தநாள் கொண்டாடும் சின்ன தல..ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று (நவம்பர் 27) தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கிரிக்கெட்டில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. தோனியை தல என்று கூறி ரசிகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்களோ அதேபோல் சுரேஷ் ரெய்னாவையும் சின்னத்தல என்று கொண்டாடுகின்றனர். அவர் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்:
கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார் சுரேஷ் ரெய்னா. தற்போது காசியாபாத் நகரின் ராஜ்நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இடது கை பேட்ஸ்மேன்:
முன்னதாக, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இந்திய அணியில் விளையாடிய இடது கை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவர் ரெய்னா.
கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அதேபோல், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகத்தான் அறிமுகமானார். டி 20 போட்டியில் 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமான இவர், 18 டெஸ்ட் போட்டிகளில் 31 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து மொத்தம் 768 ரன்கள் அடித்துள்ளார்.
அதேபோல், 226 ஒரு நாள் போட்டிகளில் 194 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்துள்ள இவர் 5615 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் 36 அரைசதங்களும் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் 78 மேட்களில் 66 இன்னிங்ஸ் விளையாடி உள்ள ரெய்னா 1604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளில் 200 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர் 5528 ரன்களை குவித்துள்ளார்.
டி20-யில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்:
மேலும், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 போட்டியில் அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர் என மொத்தம் 101 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் சுரேஷ் ரெய்னா.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது நெதர்லாந்து நாட்டில் தன்னுடைய பெயரிலேயே ஹோட்டல் ஒன்றை தொடங்கி பிசியாக நடத்தி வருகிறார். இதனிடையே இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் சுரேஷ் ரெய்னாவுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க: உள்ளே சென்ற கம்பீர்.. 12 வீரர்களை வெளியே அனுப்பிய கொல்கத்தா! வெளியானது பட்டியல்
மேலும் படிக்க: IPL 2024: சென்னை, மும்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட வீரர்கள்: கையிருப்பு எவ்வளவு? முழு விவரம்